அத்தியாயம் (31)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று இரவு வழமைக்கு மாறாக வாசலில் காலடி எடுத்து வைக்கும் பொழுதே சத்தமாக கனகாவை அழைத்த வண்ணம் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தர பாண்டி. அவர் குரலில் இருந்த சுதியே கனகாவுக்கு அபாய மணி அடிப்பதைப் போல இருந்தது. அவர் அழைத்த விதத்தில் இருந்தே அது நல்லதுக்கு அல்ல என்பதை புரிந்து கொண்டு பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டே சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் அவள்.

''அந்த ஐயாவுக்கு என்ன புத்தி பேதலிச்சு போச்சா?? அந்த சீமைக் காரி சொன்ன படியெல்லாம் ஆடறாரா அந்த ஆளு?? பெரிய மனுஷன் தானே அவரு அவரே அவர் பையனுக்கு அந்த டாக்டர் பொண்ணைக் கூட்டி குடுப்பாரு போலருக்கு.... ஷக்தி எங்கே போயிருக்கான் தெரியுமாடி உனக்கு???'' வந்ததும் வராததுமாக சத்தம் போடத் தொடங்கினார் சுந்தரம்.

ஷக்தி சஞ்சனாவுடன் கூட மருத்துவ முகாமிற்கு சென்றிருந்தது கனகாவுக்கும் தெரிந்து இருந்தது. அது கேள்வி பட்ட மாத்திரத்தில் கனகாவும் ஆச்சியும் கூட அது பற்றி பெருமிக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் அது சுந்தரத்தின் காதுக்கு செல்லும் என்பதையோ மனிதன் ஒரு நாளும் இல்லாமல் இப்படி நடு வீட்டில் நின்று கொண்டு ஆடுவார் என்றோ அவள் சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இப்பொழுதோ அவளுக்கு அது தனக்குத் தெரியும் என்று சொல்லவும் கூட பயமாக இருந்தது.

''என்னங்க சொல்றிங்க...?'' என்று பம்மினாள் கனகா.

பதிலுக்கு செவிப்பறையில் ''டொயிங்ங்ங்..............ங்........ங்.......ங்.........ங்'' என்று சத்தம் வரும் அளவிற்கு கனகாவின் கன்னத்தை சுந்தரத்தின் கை பதம் பார்க்க, கனகா நின்ற இடத்திலேயே சுற்றிச் சுழன்று ஒரு மூலையில் சென்று விழுந்தாள்.

''பொய்யாடி சொல்ற என்கிட்டே??? நம்ம பொண்ணு வாழ்க்கையை பத்தி உனக்கும் உன் ஆத்தாளுக்கும் நிஜமாவே அக்கறை இருக்கா இல்லை அந்த ஐயா பேச்சை கேட்டுக்கிட்டு என்கிட்டே நாடகம் போடறீங்களா எனக்கு இன்னிக்கி ரெண்டுல ஒன்னு தெரியணும். எங்கடி உன் பொண்ணும், ஆத்தாளும் ஒளிஞ்சிட்டு இருக்காங்க??? வாங்கடி வெளியில.............''

கனகா அறை வாங்கி ''அம்மா..............'' என்று அலறிய நிமிடமே ஆச்சியும், அபியும் என்னவோ ஏதோவென பயந்து முன்னறைக்கு ஓடி வந்தனர். அதற்கிடையில் சுந்தரம் ஆச்சியையும், அபியையும் கூட வசை பாடி முடித்து இருந்தார். அபி ''அம்மா'' என்று ஓடிச் சென்று கனகாவைத் தூக்கி எழுப்ப முயல, ஏற்கனவே சுகவீனமாய் இருந்த ஆச்சியும் கூட கண்ணில் கலவரத்துடன் கனகாவை நெருங்கிச் சென்றாள். தாயையும், மகளையும் கண்டவுடன் கனகா ஓவென அழ ஆரம்பிக்க,

''என்னப்பா ஆச்சு?? எதுக்கு இவ்வளவு கோபமா இருக்கீங்க?? எதுக்கு இப்போ அம்மாவைப் போட்டு அடிச்சிங்க??'' என்று தந்தையிடம் சிடுசிடுத்தாள் பெண்.

''நீ தான்டி அம்மா அம்மாங்கற ஆனா உங்க அம்மாவுக்கு உனக்கு கல்யாணம் பண்ற நோக்கமே இல்லை. அந்த கேடுகெட்ட ஐயா என்னன்னா தன் பையனையே கூட்டிக் குடுக்க துனிஞ்சிட்டான். ஷக்தியை அந்த பொண்ணு கூட கோத்தகிரிக்கு அனுப்பி வச்சு இருக்கானாம்ல. அது தெரிஞ்சு இருந்தும் உங்க அம்மாவும் ஆச்சியும் அமுக்கமா இருந்து இருக்காளுக..........'' கர்ஜித்தார் சுந்தரம்.

''இருக்கட்டும்!!!!!!............ அதுக்கு???.............. நீங்க அம்மாவுக்கு கை நீட்டிருவிங்களா??'' பதில் கேள்வி கேட்டாள் பெண்.

அபி தன்னை எதிர்த்து பேசியது கூட சுந்தரத்துக்கு பெரிதாகத் தோணவில்லை ஆனால் அவர் சொன்ன விஷயத்துக்கு அவள் அதிர்ச்சி அடைவாள் என்று எண்ணினால் அது அவளை சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லையே என்பது தான் அவருக்கு ஆச்சர்யம்.

''என்னங்கடி எல்லாரும் சேர்ந்துக்கிட்டு கூட்டு களவாணித் தனமா பண்றீங்க?? எண்ணி ஒரே மாசத்துல இந்த கல்யாணம் நடந்தாகணும்!!!. விடியட்டும் நானா அந்த ஐயாவான்னு ஒரு கை பாத்துரலாம்.''

தந்தை ஒரு நாளும் இல்லாமல் இப்படி தாம் தூம் என்று ஆடுவது, தாய் அடி வாங்கியது, ஷக்தி அவள் காதலை நிராகரித்தது என்று எல்லாமும் சேர்ந்து ஆற்றாமையாக வெளிப்பட அது ஆவேசமாக வெடித்தது அபிராமிக்கு.

''எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். உங்களால என்னை வச்சு காப்பாத்த முடியும்னா சொல்லுங்க உங்க கூடவே இருக்கேன், இல்லை எதையாச்சும் குடிச்சிட்டு செத்து தொலையிறேன்'' தந்தையைப் பார்த்து அழுகை வெடிக்க கத்தினாள் அவள்.

அபிராமியின் கல்யாணத்தின் மீது ஈடுபாடில்லாத வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் சந்தேகம் கொள்ள வைக்க, ஐயாவின் வீட்டில் உள்ள யாரோ தான் அபியை மூளை சலவை செய்திருக்க வேண்டும் என்று அதனால் அதிக பட்ச ஆத்திரத்துக்கு உள்ளாகியிருந்த சுந்தரமோ அபியை கோபமாக நெருங்கி சென்று அவளை சுவரோடு வைத்து சாய்த்து அவள் தலை முடியை கொத்தாகப் பிடித்து,

''சொல்லுடி....... இப்படி பேசச் சொல்லி அந்த ஷக்திப் பய சொன்னானா??? நேத்திக்கு வரை ஷக்தியை நெனச்சு கனவு கண்டுட்டு கிடந்தவ இன்னிக்கி கல்யாணமே வேண்டாங்கற??? என்னை என்ன கேணப் பயன்னு நெனச்சியா நீ??? நீ இப்போ உண்மையை சொல்லலை உனக்கு விஷம் குடிச்சு சாகற கஷ்டத்த குடுக்காம உன்னை வளர்த்த இதே கையாள உன் கழுத்தை நெரிச்சு நானே உன்னை கொன்னு போட்டுருவேன்''

''என்னங்க அவளை விட்டுருங்க... நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைங்க. நீங்க என்னை அடிச்சத்தை பார்த்துட்டு அவ அப்படி பேசறா...... அவளை விட்டுருங்க.........'' என்று அழுகையினூடே சுந்தரத்தைப் பிடித்து இழுத்தாள் கனகா.

சந்தோஷம் மட்டுமே குடியிருந்த வீடு இழவு வீடு போல ஆகியிருந்தது, அபி பிறந்தது முதல் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கித் தாங்கி பார்த்துக் கொண்ட மனிதர் இன்று அருள் வந்தது போல ஆடிக் கொண்டு இருக்கிறார், இது எங்கு சென்று முடியப் போகின்றதோ என்ற பயமும், கண் மூடி சாய்வதற்குள் தன் பேத்தியின் திருமணத்தை பார்த்து விட முடியாது போய் விடுமோ என்ற அச்சமும் சேர்ந்து ஆச்சிக்கு நெஞ்சு வலிப்பது போல இருந்தது. பல்லைக் கடித்து வலியை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றவரால் அதற்க்கு மேல் முடியாது போக உடல் முழுவதும் படபடப்பு போல வந்து கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் சரிந்து விழுந்தாள் ஆச்சி.

அங்கு நடந்து கொண்டு இருந்த கலவரத்தில் யாரும் ஆச்சியை கவனிக்கவில்லை. ஆச்சி மயங்கி சரிந்த சத்தம் கேட்கவும் தான் அனைவரது கவனமும் ஆச்சியின் மீது திரும்பியது. ஆனால் சத்தம் கேட்டு அந்த மூவரும் ஓடி வருவதற்குள் ஆச்சி மயக்க நிலைக்கு சென்று இருந்தார். இப்பொழுது மூவரையும் பயம் தொற்றிக் கொள்ள, மூவரும் ஏற்கனவே இருந்த நிலையில் என்ன செய்வது என்று அறியாது ஓவென்று அழ ஆரம்பித்தனர். கனகா தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, அபி ஓடிச் சென்று தண்ணீரை எடுத்து வந்து ஆச்சியின் முகத்தில் தெளித்தால். அப்பொழுதும் ஆச்சி எழுந்து கொள்ளவில்லை என்றதும் இப்பொழுது அபியையும் பீதி தொற்றிக் கொண்டது.

என்ன ஆட்டம் ஆடினாலும் சுந்தரம் தான் கடைசியில் தன்னை சுதாகரித்துக் கொண்டு ஆச்சியை வண்டியில் ஏற்றிக் கொண்டு மனைவி, மற்றும் மகளுடன் குன்னூர் நோக்கி அசுர வேகத்தில் பயணமானார்.

உச்சிமலையில் மருத்துவ முகாமுக்கான கடைசி நாள் இனிதே விடிந்தது. கடைசி நாள் பெண்களுக்கான பரிசோதனை செய்யப் படும் நாள். முந்தைய இரண்டு நாட்களும் போலவே இன்றைய நாளும் சுறுசுறுப்புடன் நகர்ந்தது. நாளின் முடிவில் அன்று தான் கடைசி நாள் ஆகையால் ஊர் மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் சஞ்சனாவுக்கும் ஏனைய பெண்களுக்கும் தங்கள் தோட்டங்களில் வளர்ந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அன்பளிப்பாக எடுத்து வந்து கொடுத்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

அன்றைய நாளின் முடிவில் ஷக்தி, டிரைவர் மற்றும் கிளீனர் சகிதம் போடப்பட்ட கூடாரங்களை கழட்டும் முயற்சியில் ஈடுபட சஞ்சனா மற்றும் பெண்கள் தங்கள் ப்ராஜெக்டை எழுத்து வடிவில் தயார் செய்வதில் மும்முரம் காட்டினர். அன்றைய தினமே கிளம்பி விடுவது என்று அவர்கள் முடிவு செய்து இருந்த பொழுதும், வேலைகள் நிறைவடைய எதிர்பார்த்ததற்கும் அதிகமான நேரம் முடிவடைந்து இருக்க நாளை காலை திரும்பி செல்வது என்று முடிவானது.

மறுநாள் காலை அனைவரும் வீட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் அதிகாலையே எழுந்து கொண்டனர். அவர்கள் அதிகாலை புறப்படுவது அறிந்து சோமனும் அவன் மனைவியும் காலை உணவை அவர்கள் எழுந்து இருப்பதற்கு முன்னமே தயார் செய்து இருக்க, காலை உணவை முடித்துக் கொண்டு அங்கு வந்து இருந்த ஒரு சிலரிடம் விடை பெற்றுக் கொண்டு மருத்துவக் குழு உச்சிமலையில் இருந்து கோயமுத்தூர் நோக்கி பயணம் ஆனது.

இப்பொழுது மாணவிகள் அனைவரும் ஷக்தி மற்றும் சஞ்சனாவுடன் பல கால நட்பு போல பழக ஆரம்பித்து இருக்க வழி நெடுகிலும் பாடலும் ஆட்டமுமாக வண்டி நகர்ந்து கொண்டு சென்றது. இடை இடையே வண்டியை பாதை ஓரமாக நிறுத்தி நொறுக்கு தீனிகள் வாங்கி உண்டனர், சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டனர். ஒரு நீரோடையில் இறங்கி குளித்து உடை மாற்றி அருகே இருந்த ஒரு கடையில் முட்டை புரோட்டாவையும், கோழிக் குருமாவையும் பதம் பார்த்தனர். உச்சிமலைக்கு வரும் வழியில் நீளமாக இருந்த பாதை, வீடு நோக்கி செல்லும் பொழுது குறுகிப் போனது போல இருந்தது. வண்டி அதற்குள் கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தை அடைந்து இருக்க மாணவிகள் அனைவரும் ஷக்தியையும் சஞ்சனாவையும் கட்டித் தழுவி விடை பெற்றனர்.

ஷக்தியும் சஞ்சனாவும் டாக்டர் தனபாலனிடமும், பொறுப்பு பேராசிரியர்களிடமும் பேசி விடை பெற்றுக் கொண்டு கல்லூரி வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த ஷக்தியின் வண்டியில் ஏறிக் கொண்டு மறுபடியும் பூம்பொழில் நோக்கி பயணம் ஆகினர். அந்த சந்தோஷ பிரயாணம் முடிவுக்கு வந்ததினாலேயோ, மாணவிகளை இறக்கி விட்டதினால் அங்கு நிலவிய மௌனமோ, மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்கிற எதிர்காலத்தைக் குறித்த பயமோ, இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பாரம் ஷக்தியின் மனதையும் சஞ்சனாவின் மனதையும் சட்டென வந்து ஆக்கிரமித்துக் கொள்ள வழி நெடுகிலும் ஷக்தியும் சஞ்சனாவும் அமைதியாகவே வந்தனர். இடையில் சஞ்சனா ஷக்தியின் தோலில் சாய்ந்து கொண்டாள். வண்டி ஊருக்குள் நுழைந்ததும் என்ன நினைத்தாலோ, எது அவளைத் தடுத்ததோ இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.

காவலாளி வந்து கேட்டைத் திறந்து விட வண்டி துறை பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தது. இருவரும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர். ஷக்தி களைப்பாக வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொள்ள, சஞ்சனா, வாசுகியைப் பார்ப்பதற்கென சமையற் கட்டிற்க்குள் நுழைந்தாள். வாசுகி அங்கு இல்லை என்றதும் கொல்லை புறம் எட்டிப் பார்த்தாள் வாசுகியை அங்கும் காணவில்லை. ''அத்தை எங்கே போனாங்க......................'' என்றவாறு அவள் முன்னாள் நடந்து வர, ஷக்தியோ, ''சின்னா...........'' என்று குரல் கொடுத்தான். பல முறை அழைத்தும் சின்னாவையும் காணவில்லை. ஷக்தியின் சத்தம் கேட்டு எங்கிருந்தோ வேலைக்காரி ஓடி வந்து தயங்கித் தயங்கிக் கூறினாள்,

''சின்னையா....... ஆச்சி தவறிட்டாங்க. எல்லாரும் அங்க தான் போய் இருக்காங்க................''

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro