அத்தியாயம் (34)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

முத்துப்பாண்டி, வாசுகி மற்றும் சின்னா ஏறிக்கொள்ள வண்டி சுந்தரம் வீட்டை விட்டு மின்னல் வேகத்தில் கிளம்பியது. முத்துப்பாண்டி கண்கள் சிவக்க, உடல் வியர்க்க கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் வண்டியை தானே இயக்கினார். நடந்தது என்ன, இனி நடக்கப் போவது என்ன என்ற குழப்பமும் பயமுமாக வழி நெடுகிழும் அழுது கொண்டே வீடு போய் சேர்ந்தாள் வாசுகி.

ஷக்தியும் ஐயாவைத் தொடர்ந்து வேகமாக சஞ்சனாவை கை பிடித்து அழைத்தபடி தன் காரில் ஏறி துறை பங்களாவை சென்றடைந்தான். வழி நெடுகிலும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டு வாசலில் இறங்கிக் கொண்ட இருவருக்கும் எதிர்ப்பார்த்தது போலவே ஷக்தியின் உடமைகள் லக்கேஜ் சகிதம் வாசலில் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது, அதற்கு மேல் பேசுவதற்கோ விளக்குவதற்கோ ஏதுமில்லை என்பது போல! சஞ்சனா என்ன முடிவு செய்து இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் வண்ணம் ஐயா உள்ளே இருந்து சஞ்சனாவை நோக்கி ஒரு பார்வை பார்த்தார்.

அவருக்கு பதில் சொல்லும் நிலையிலோ குறைந்தது தன்னிலையிலோ இல்லாதிருந்த சஞ்சனா ஷக்தியை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென மாடிப்படி ஏறினாள். அந்த பார்வை அவள் மீதி வாழ்க்கை ஷக்தியுடன் தான் என்பதை வார்த்தைகளின் தேவையின்றி உணர்த்திவிட்டது. இத்தனைக்குப் பிறகும் ஷக்திக்கு மனதுக்குள் ஒரு உற்சாகம் எட்டிப்பார்க்கத் தான் செய்தது.

தன் அறைக்குள் புகுந்த சஞ்சனா மெடிக்கல் கேம்ப்புக்கு எடுத்து சென்றது போக மீதமிருந்த தன் பொருட்களை அள்ளி ஒரு சூட்கேசுக்குள் திணித்துக் கொண்டு சென்ற வேகத்தில் திரும்பி வந்தாள். ஐயாவின் முகத்தில் இப்பொழுது எந்த சலனமும் இல்லை தெளிந்த பார்வை பார்த்துக் கொண்டு இருந்தார். வாசுகி அவர் அருகில் கண் கலங்க நின்றிருந்தாள். மாடியில் இருந்து வந்த சஞ்சனா சாஷ்ட்டாங்கமாக தன் அத்தை மாமா காலில் விழுந்து வணங்கினாள். அவள் யாசித்தது ஆசீர்வாதமா, மன்னிப்பா என்பதை அவள் மட்டுமே அறிவாள். அவளது கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வடிந்து அவ்விருவர் கால்களையும் நனைத்தது. காலில் வழிந்தோடிய கண்ணீர்த்துளி நிச்சயம் அவர்கள் மனதையும் நனைத்திருக்க வேண்டும். வாசுகி தான் துக்கம் தொண்டை அடைக்க சஞ்சனாவை தோல் தூக்கி எடுத்து நெஞ்சோடு அணைத்து விடை கொடுத்தாள். சஞ்சனா பெட்டி சகிதம் ஷக்தியை நோக்கி செல்ல, ஷக்தி கண்களால் தன் பெற்றோறிடம் விடை பெற்றுக் கொண்டு தன் வண்டியில் ஏறி சஞ்சனாவோடு factory நோக்கி பயணமானான்.

Factory யில் ஷக்தியின் ஆபீஸ் அறையோடு சேர்ந்தாற் போல கதவுடன் கூடிய ஒரு படுக்கை அறை உண்டு. வேலை மிகுதியால் இரவு வீடு திரும்ப முடியாத நாட்களில் ஷக்தி அந்த அறையிலேயே படுத்துக் கொள்வான். அடுத்து என்ன செய்ய வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்று சரியாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் தான் ஷக்தி கடைசியாக் தன் ஆபீஸ் அறைக்கு வந்து சேர்ந்தான். Factory யை பொறுத்த வரை ஐயா பெயருக்குத் தான் முதலாளி. அது 100% ஷக்தியின் கோட்டை. 70% பங்குகள் ஏற்கனவே ஷக்தியின் பேரிலே தான் இருந்தது. அங்கு இருந்து அவனை வெளியேற்ற ஐயாவால் கூட முடியாது. ஷக்தி அங்கு தங்கி இருப்பதை அறிந்தால் ஐயா அதிகபட்சம் அந்தப்ப்பக்கம் செல்வதை குறைப்பார். அவர் factory க்கு தினமும் சென்று தான் தீர வேண்டும் என்ற கட்டாயமும் ஒன்றும் இல்லை. அவரை வீட்டில் ஓய்வாய் இருக்குமாறு ஷக்தி அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வதும் தான்! ஆக மொத்தம் தற்காலிகமாக சஞ்சனாவை தங்க வைக்க தகுந்த இடமாக ஷக்தி தனது ஆபீசை தெரிவு செய்து இருந்தான்.

ஆபீஸ் அறையை திறந்து மின்குமிழைத் தட்டிவிட்டு இருவரும் அந்த அறையின் lounge பகுதியில் இருந்த எதிரெதிர் சோபாக்களில் தொப்பென்று விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் என்னவெல்லாம் நடந்து முடிந்து விட்டது என்றிருந்தது இருவருக்கும். நடந்ததையே நினைத்து கலங்குவதில் என்ன பயன் என்பது போல நடப்புக்கு வந்தவனாய் சஞ்சனாவைப் பார்த்தான் ஷக்தி. சஞ்சனாவோ தலைக்கு கை கொடுத்து தரையைப் பார்த்து அமர்ந்து இருந்தாள். ஏதோ ஒன்று உறுத்த தலை நிமிர்ந்து ஷக்தியை பார்த்தவளது கண்கள் ஷக்தியின் கண்களோடு கலந்தது. ஒருவரை ஒருவர் ஒரு சில நொடிகள் பார்த்த வண்ணம் மட்டுமே நின்றிருக்க அமைதியை கலைத்த வண்ணம்

"தாங்க்ஸ் ஷக்தி" என்றாள் அவள்.

"எதுக்கு" அவள் கண்ணைப் பார்த்து கேட்டான்.

"சபைல தலை குனிஞ்சு அவமானப்பட்டு நிக்கிறது இது எனக்கு செக்கெண்ட் டய்ம். ஆனால் இந்த வாட்டி நான் தனியா நிக்கல.. எனக்காக, என்கூட நீ நின்ன..."

"இது என்ன பிரமாதம்? என் பொண்டாட்டிக்காக நான் நிற்காமல் வேற யாரு நிற்பா? நான் பேசாமல் வேற யாரு பேசுவா???"

"நீ எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்க, ஆனால் அவன் என்னை விட்டெரிஞ்சிட்டுப் போய்ட்டான்...."

"நீ இன்னுமா அவனை நினைச்சிட்டு இருக்க???" என்றான் ஷக்தி கண்களில் கூர்மையுடன்.

ஷக்தி கேட்ட கேள்வியில் சஞ்சனா வெளவெளத்துப் போக அவளை அமைதிப்ப்படுத்தும் வண்ணம் அவள் அருகில் சென்று

"கொஞ்சம் எழுந்திரு" என்றான்.

கண்களில் கலக்கத்துடன் சஞ்சனா எழுந்து நின்று கொண்டாள். தனது வலக்கரத்தால் அவளது தாடையைப் பிடித்து நிமிர்த்தினான் அவன். இப்பொழுது இருவருக்கும் இடையில் நூலளவு தான் இடைவெளி இருக்க, சஞ்சனாவின் கண்களை நேராகப் பார்த்து,

"மறுபடியும் சொல்றேன். நான் பிரமாதமா ஒன்னும் பண்ணிடல. உன்னை இப்படி கிட்டக்க பார்க்கும் போது உனக்காக இன்னும் என்ன வேண்ணா பண்ணலாம்னு இருக்கு. உனக்காக கொலை கூட பண்ணலாம்டி பொண்டாட்டி தப்பே இல்லை....." என்றான் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு. இப்பொழுது சஞ்சனா தான் வெட்கி முகம் சிவந்தாள். சஞ்சனாவின் முகத்திலும் மனதிலும் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வதைக் கண்டவன் மனதில் திருப்த்தியுற்றவனாய்,

"பயங்கர டயர்டா இருக்கு சஞ்சனா... நான் போய் குளிச்சிட்டு வரேன். நீ அதுக்குள்ள ரூம்ல உள்ள கப்போர்ட்ல உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிரு. குளிச்சிட்டு நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வாரேன்." என்றான்.

ஷக்தி குளித்து உடை மாற்றி உணவு வாங்க டவுனுக்கு சென்றான். ஷக்தியின் ஆபீஸ் அறை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஆபீஸ் ஏரியா, லவுன்ச் ஏரியா, பெட் ரூம் வித் அட்டாச்ட் டாய்லெட் பாத் ரூம். அது அபீஸ் என்பதை விட ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சூட் போல காட்சி அளித்தது. வெள்ளை சுவர்கள், வெள்ளை தளபாடங்கள், வெள்ளை திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள் என்று அது ஒரு மிக அழகான படுக்கை அறை.

ஷக்தி டவுனுக்கு சென்றதும் குளித்து முடித்து வெளியே வந்த்தவள் குளியலறை வாசலில் இருந்த லாண்டரி பாஸ்க்கெட்டில் ஷக்தி சற்று முன் கலட்டிப் போட்ட அவனது சட்டை இருக்க அதை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தவள் அதை நெஞ்சோடு அணைத்தவாரு கட்டிலில் விழுந்து ஒரு ஓரமாக தூங்கியும் போனாள். உணவுப் பொட்டலங்களுடன் உள்ளே வந்த ஷக்தி அவளது தூக்கத்தை கலைக்க மனதற்றவனாய் கலைப்பு காரணமாக உணவுப் பொதிகளை மேசையில் வைத்து விட்டு அவனும் கட்டிலின் ஒரு ஓரத்தில் ஏறி படுத்து விட்டான். இருவரும் கண் விழித்த போது நேரம் மாலை 6:30.

"குட் மார்னிங்" என்றான் கட்டிலின் ஒரு புறம் இருந்து.

"குட் மார்னிங்" என்றாள் சோம்பல் முறித்தவாறு.

"காலைல உச்சிமலைல காலை சாப்பாடு சாப்பிட்டது. பசி உசுரு போகுது வா சாப்பிடலாம்"

இருவரும் எழுந்து லவுஞ்சுக்கு சென்று உணவு உண்டனர். சாப்பட்டிற்கு இடையே ஷக்தி சஞ்சனாவை அவளது பெற்றோரை அழைத்து நடந்தவை அனைத்தையும் அவர்களுக்கு தெரியப்படுத்தும் படி கூற சஞ்சனா தன் தாயை தொலைபேசியில் அழைத்து நடந்தவை அனைத்தையும் ஒரு மணி நேரமாக பேசி முடித்தாள். சஞ்சனா கூறக் கேட்ட யசோதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. முதன்முறையாக ஷக்தியுடன் பேசிய யசோதா இருவரையும் தன் பங்குக்கு நொந்து கொண்டு பின் சில அறிவுறைகளை கூறி விட்டு வைத்தாள்.

"அம்மாக்கு என் கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவு இருந்த்துச்சு. அது தான் கொஞ்சம் டிஸ்அப்பாயிண்ட் ஆகிட்டாங்க"

"நீ டிஸ்அப்பாயிண்ட்டட்டா இருக்கியா சஞ்சனா???"

"இது என்ன கேள்வி? அம்மாவுக்கு ஐயாவைப் பத்தின கவலை அவரை தலை குனிய வச்சிட்டமேன்னு..." கதையை திசை திறுப்பினாள்.

"ஐயா மனசுல என்ன நினைச்சிட்டு நம்மல வெளில போக சொல்லி இருப்பார்ன்னு எனக்கு நல்லா தெரியும். அவருக்கு நம்ம மேல துளி கூட கோபம் கிடையாது. சாதி சனம் முன்னாடி வேற வழி இல்லை அவருக்கு...." தந்தையைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினான் ஷக்தி.

"இங்க சரியான போர் அடிக்குது ஷக்தி. நல்லா தூங்கியாச்சு. இனி தூக்கம் வராது. இந்த நாலு சுவத்துக்குள்ள என்ன தான் பண்றது????"

"ஏன் பண்றதுக்கா ஒன்னுமில்லை....." முனுமுனுத்தான் ஷக்தி.

"என்ன சொன்ன??" நிஜமாகவே புரியாமல் கேட்டாள் அவள்.

"இல்லை போர் அடிச்சா ரெடி ஆயிட்டு வா. வண்டில ஒரு டிரைவ் போய்ட்டு வரலாம்ன்னேன்...." இழுத்தான் அவன்.

"சூப்பர் ஷக்தி" குதித்து எழுந்தவள், "ஒரு நிமிஷம் லவுன்ச்ல வெயிட் பண்ணு டிரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்".

ஷக்திக்கு மனதின் ஒரு ஓரத்தில் அழுப்பாக இருந்தது, இவள் தான் என் பொண்டாட்டி என்று ஊருக்கு முன்னாள் மார்பை நிமிர்த்தி சொல்லியாயிற்று. ஆனால் அந்த பொண்டாட்டிக்கு இவன் நம் புருஷன் என்று புரிகிறதா இல்லையா!!! இவ்வளவு அழகான ஒரு பொண்டாட்டியை பக்கத்தில் வைத்து அழகு மட்டும் பார் என்று சொல்லும் வாழ்க்கையை "என்ன வாழ்க்கைடா இது" என்று அருகே இருந்த மேஜைக்கு காலால் எட்டி உதைத்து பலி தீர்த்துக் கொண்டான். சஞ்சனா உடை மாற்றிக் கொண்டு வர தாமதமாக காதுகளுக்கு Handsfree யை கொடுத்து பாடல்களை லூப்பில் ஓட விட்டான். அதன் நடுவே கதவைத் திறந்து கொண்டு சஞ்சனா வெளியே வர அவன் வாய் அனிச்சையாக் திறந்து கொண்டது.

சஞ்சனா கருப்பு நிறத்தில் குட்டை கை வைத்த ஜாக்கெட்டும், கருப்பு நிற ஜார்ஜெட் புடவையும் அணிந்து இருந்தாள். கழுத்தில் மஞ்ச்ள் தாலி மின்ன ஜானளவு இடைவெளியில் அவள் மஞ்சள் இடை பளபளத்தது. வாயைக் குவித்து காற்றை வாயால் ஊதி விட்டவன் தாங்க முடியாமல் தலையை சொரிந்து கொண்டான். மனதில் கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் அவன் முன் வந்து நின்று அழகுக் காட்டி "போலாமா??" என்றாள்.

"இவ தெரிஞ்சு பண்றாலா இல்லை தெரியாமல் பண்றாலா? இது என்னடா ஷக்தி உன் கற்புக்கு வந்த சோதனை!!! என்று தனக்குத்தானே சொன்னபடி "போலாம் வா..." என்று கார் சாவி சகிதம் எழுந்து நடந்தான் ஷக்தி. Handsfree யில் இன்னும் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.

"அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்துப் பார்க்கப் பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro