அத்தியாயம் (35)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஷக்தி கார் கண்ணாடிகளை திறந்து வைத்த வண்ணம் காரை ஓட்டினான். லாங் டிரைவ் என்றவுடன் சஞ்சனாவும் குதூகலமாக அருகில் ஏறி அமர்ந்து கொண்டாள். சில்லென்ற பனிக்காற்று முகத்தில் அடிக்க ஷக்தியின் ரெய்ஞ்ச் ரோவர் அந்த கார்ப்பெட் ரோட்டில் சீறிப்பாய்ந்தது. இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. ஷக்தி ப்ளேயரில் இளையராஜா பாடல்களை ஓடவிட்டிருந்தான். அந்த காரிருள், சில்லென்ற காற்று, இருவரின் அருகாமை, இளையராஜா இசை. அங்கு வீண் பேச்சுக்கு அவசியம் இருக்கவில்லை. அந்த ரம்மியமான சூழ்நிலை இருவரின் மனதிலும் வெவ்வேறு எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தி இருந்தது.

சஞ்சனா தன்னை முழுவதுமாக கணவனாக ஏற்றுக்கொண்டு விட்டாலா இல்லையா? ஆம் என்றால் அதை அவன் எவ்வாறு அறிந்து கொள்வது? இல்லை என்றால் அவளை எது தடுக்கிறது? ஷக்தி அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடி தான் என்ன? எக்குத்தப்பாய் எதையோ செய்யப்போய் அது ஏடாகுடமாகப் போய் முடிந்து விடுமோ... அவனாக ஆரம்பிக்க வேண்டும் என்று சஞ்சனா எதிர்பார்க்கிறாளா? ஷக்தி தான் வலிய செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்ணா சஞ்சனா? சஞ்சனாவுக்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராகத் தேவையான நேரத்தை ஷக்தி கொடுத்து இருக்கிறானா? திருமண பந்தத்தில் தாம்பத்தியம் தான் சகலமுமா? அவன் தப்பா சஞ்சனா தப்பா? இல்லை இருவருமே சரி தானா?ஆயிரம் கேள்விகள் ஷக்திக்குள் ஆனால் எதற்குமே பதில் தான் தெரியவில்லை அவனுக்கு.

ஷக்தி ஒரு தெளிந்த சிந்தையுள்ள ஆண் மகன். அவனுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை அவன் எப்பொழுதும் குழப்பமின்றி சரியாக முடிவெடுக்கும் தன்மை கொண்டவன். எந்த ஒரு கேள்விக்கும் அந்த கேள்வியினுள்ளேயே பதில் இருக்கும் என்று நம்புகிறவன். அவனது விம்பத்தை ஒரு பெண் இப்படி போட்டு உடைப்பாள் என்று யாரேனும் அவனுக்கு 6 மாதங்களுக்கு முன் சொல்லி இருந்தால் அவன் அவ்ர்களை பார்த்து அகம்பாவமாக சிரித்திருப்பான். ஆனால் எல்லா மனிதனுக்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்கத்தானே செய்கிறது. ஷக்தி விஷயத்தில் அது சஞ்சனா!

ஷக்தியை இப்படி அவளிடத்தில் கட்டிப்போட்டது சஞ்சனாவின் அழகு என்றால் அது பொய்! அவள் ஆளை மயக்கும் அழகு தான் ஆனால் அதையும் தாண்டி அவளிடத்தில் ஏதோ இருந்தது. எண்ணஓட்டத்துக்கு இடையே சஞ்சனாவை ஓரக்கண்ணால் பார்த்தான் அவன். இடக்கையை கன்னத்துக்கு கொடுத்து ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் இருந்த அமைதி கதைகளில் வரும் தேவதைகளை நினைவு படுத்தியது அவனுக்கு. சிறகு முளைக்காத குட்டி தேவதை!

சஞ்சனா ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் ஆனால் எண்ணங்கள் என்னவோ அன்று காலை முதல் நடந்த கலேபரங்களிலேயே நின்று உலன்று கொண்டிருந்தது. கழுத்தில் ஷக்தி கட்டிய தாலி, ஊரே அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் அவளது மீதி வாழ்க்கை ஷக்தியோடு தான் என்று சொன்ன மனது மட்டும் ஷக்தி அவளது கணவன் என்பதை இன்னும் ஏற்க மறுத்தது. சஞ்சனா ஷக்தியை மிகவும் நேசித்தாள். ஷக்தி போன்ற ஒரு ஆணை அவள் இதுவரை கண்டதே இல்லை எனுமளவிற்கு அவளுக்கு அவன் மேல் மரியாதை இருந்தது. ஆனால் இவன் என் கணவன், எனக்கு மட்டுமே சொந்தமானவன், என் உடலிலும் உயிரிலும் பாதியானவன் எனும் உணர்வு இதுவரை அவளுக்கு வரவே இல்லையே! எது அவளை தடுக்கிறது? ஷக்தி முதலில் அவளை காதலித்து இருக்க வேண்டுமா? அவளுள் இருக்கும் காதலை அவன் வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டுமா? அவளை இம்ப்பிரஸ் செய்து பின்பு ப்ரப்போஸ் செய்து அவள் விருப்பத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவளை ஊரரிய மனைவி ஆக்கிக்கொண்டிருக்க வேண்டுமா? அவன் அப்படி செய்து இருந்தால் தானாகவே அவன் என் கணவன், என்னவன் என்ற உண்ர்வு அவளுக்கும் வந்திருக்குமோ!

ஷக்தி சஞ்சனாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வான். எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராய் இருந்தான். அவளது சந்தோஷங்களிலும் துக்கங்களிலும் அவளுக்கு தோல் கொடுத்தான். தோல் கொடுத்து கொடுத்தே தோழனாயும் ஆகிப் போனான்! ஆம் ஒரு தோழனுக்கு மேலே எதாயும் அவளால் இன்னும் அவனை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. கடமைக்காகவோ கட்டிய தாலிக்காகவோ சஞ்சனாவால் அவனிடத்தில் நடிக்கவும் முடியாது வராத ஒன்றை வற்புருத்தவும் முடியாது. அவளுக்கு அவனிடத்தில் பிரியம் இருந்தது, மரியாதை இருந்தது, உரிமை இருந்தது, அவளுக்கு அவனிடத்தில் இதுவரை வராத அந்த ஒன்று காதல்!!!

காதலில் என்னவோ ஷக்தி மன்மதனாய் கூட இருந்து விட்டு போகட்டும். ஆனால் அவளை தன்னை காதலிக்க வைப்பதில் அவன் தோற்றுத்தான் போனான். காதலித்தலும், காதலிக்க வைத்தலும் வெவ்வேறு அல்லவா? சஞ்சனா காதலிக்கப் பட்டால். ஒரு ஆணால் எக்கச்சக்கமாக காதலிக்கப் படுதல் என்பதும் ஒரு சுகம் தான். ஆனால் அந்த காதல் அவளையும் அவன் புறம் கட்டிப்போட வேண்டும் அல்லவா? ஆனால் ஷக்தி போன்றொரு ஆண் மேல் இன்னுமே காதல் வரவில்லை எனில் தனக்குத் தான் உணர்ச்சி நரம்பு செத்துப்போய் விட்டதோ என்று இப்பொழுது அவள் மேலேயே கோபம் வந்தது சஞ்சனாவுக்கு. இப்படியே யோசனை செய்து கொண்டு இருந்தால் கூடிய சீக்கிரமே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்க தலையை ஒரு முறை ஆட்டிவிட்டு நடைமுறைக்கு வந்தால் சஞ்சனா.

"சஞ்சு.. ஆர் யூ ஆல்ரைட்?" இது ஷக்தி.

தலையை மட்டும் ஆம் என்பது போல ஆட்டி வைத்தாள்.

"ஏய் என்ன ஆச்சு ஒரு மாதிரி டல் ஆயிட்ட... ஏதாச்சு வேணுமா?" ஒரு கையால் காரை இயக்கியபடி மறு கையால் சஞ்சனாவின் கையைப் பிடித்து நிஜமான அக்கறையுடன் கேட்டான் ஷக்தி.

"ஆமாம் வேண்டும் தான். ஒரு கிலோ காதல்!!" இது சஞ்சனாவின் மைண்ட் வாய்ஸ்.

"என்னடா என்மேல எதுனா கோபமா? ஏன் இப்ப இப்படி உர்ருன்னு இருக்க?" அவன் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்க சஞ்சனா சங்கடமாக உணர்ந்தாள்.

"ஷக்தி கேன் ஐ கெட் ஏ ஹக்?" என்றால் சட்டென்று.

ஷக்தி ஏன் எதற்கு எதுவும் கேட்கவில்லை. நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு காரினுள் அமர்ந்தபடியே சஞ்சனாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். இருவருமே இருந்த மனநிலையில் இருவருக்குமே அந்த ஆல் ஈஸ் வெல் ஹக் மிகவும் தேவைப்பட்டது. "As a couple we will somehow work this out" இருவரது இதயமும் அமைதியாக உறுதிமொழி எடுத்துக் கொண்டது. அந்த நீண்ட நேர தழுவலுக்குப் பின்னால் ஷக்தி அமைதியாக மீண்டும் வண்டியை செலுத்த ஆரம்பித்தான். ஷக்தி மற்றும் சஞ்சனாவோடு இளையராஜாவும் பயணமானார்.

ஒரு மணிநேர பயணத்தின் பின்னர் வண்டி ஒரு பெரிய பங்களாவின் காம்பவுண்ட் சுவருக்கு பின்னால் நின்று ஹாரன் அடிக்க பழக்கப்பட்ட வண்டி என்பது போல வாட்ச்மேன் சல்யூட் அடித்தபடி வந்து அந்த பெரிய இரும்பு கேட்டை அவர்களுக்காக திறந்து விட்டான். ஷக்தி வண்டியை அந்த வீட்டின் வாசல் வரை செலுத்தி பின் நிறுத்தினான்.

"நம்ம எங்க வந்து இருக்கோம் ஷக்தி?" சஞ்சனா குழப்பமாக கேட்கவும் வீட்டின் உள்ளே இருந்து அஷோக் வெளியே வரவும் சரியாக இருந்தது.

"அஷோக். என் ப்ரெண்ட்." சொல்லிவிட்டு வண்டியை விட்டு இறங்கியவன் "மச்சி......" என்ற படி ஷக்தியை நோக்கி வந்த அஷோக்கை கட்டிக்கொண்டு அவன் முதுகில் இரண்டு தட்டு தட்டினான். பின் ஷக்தியும் அஷோக்குமாக வண்டியின் மறு கதவு வரை செல்ல ஷக்தி சஞ்சனாவுக்கு கதவைத் திறந்து விட்டான். வண்டியை விட்டு இறங்கிய சஞ்சனா அஷோக்கை பார்த்து சினேகமாய் சிரிக்க,

"ஹாய் சஞ்சனா. ஐ ஆம் அஷோக்." என்று கை குழுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அஷோக். அவர்களை அவன் வீட்டினுள் அழைத்து செல்ல, வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சொகுசு சோபாக்களில் மூவரும் அமர்ந்து கொண்டனர். ஷக்தியும் அஷோக்கும் பாடசாலை காலம் முதற்கொண்டு நண்பர்கள். அஷோக் ஷக்திக்கு இருந்த ஒரே நண்பனும் கூட. அஷோக் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தான். பூனைக்கண்கள், சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்தது, தாடி வளர்த்து இருந்தான், அவ்வளவு குளிரிலும் ஆர்ம் கட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து மிகவும் காஷுவலாக இருந்தான்.

"அப்புறம் மிஸ்ஸஸ். சஞ்சனா ஷக்திவேல் பாண்டியன். கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது?" கேட்டான் அஷோக்.

"நாசமாப்போகுது....." ஷக்தி கூறிவிட்டு குப்பென்று சிரிக்க மற்ற இருவரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டனர்.

"ஒரு ஆறு மாசமா சஞ்சனா.. சஞ்சனா.. சஞ்சனான்னு என் உயிரை வாங்கிட்டான் இந்த ஷக்தி. யாருடா இந்த பொண்ணு நம்ம நண்பனை இப்படி பொறட்டிப் போட்டவன்னு யோசனை பண்ணிட்டே இருந்தேன். தப்பே இல்ல மச்சான் நீ இப்படி காதல் கிறுக்கனா சுத்திட்டு இருக்கதுல தப்பே இல்லை." சீரியசாக கூறிக்கொண்டு இருந்தவனைப் பார்க்க ஷக்திக்கும் சஞ்சனாவுக்கும் சிரிப்பு வந்தது.

"என்னை பத்தி உங்ககிட்ட இவ்வளவு சொன்னாரே உங்களை பத்தி என்கிட்ட என்ன சொல்லி இருக்காருன்னு கேழுங்க உங்க நண்பனை" என்று அவள் ஷக்தியை செல்லமாக கடிந்து கொள்ள,

அசடு வழிந்த படி "சாரி" என்றவன் பின் அஷோக் அமேரிக்கா வாஷிங்ட்டன் டீசீல சாப்ட்வேர் இஞ்சினீரா இருக்கான். 3 மாசம் ஹாலிடேக்காக இந்தியா வந்து இருக்கான். பொதுப்படையாக அறிமுகம் செய்து வைத்தான் ஷக்தி. பின்பு பேச்சும் சிரிப்புமாக நேரம் சென்றது. சஞ்சனாவுக்கு அஷோக்குடன் பேசிப்பழகுவது மிகவும் இலகுவாக இருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் ஒரு வாட்ச்மேன் ஒரு சமையலாள் அஷோக் தவிர வேறு யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அஷோக் ஷக்தி மற்றும் சஞ்சனாவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்திருக்க. உணவு உண்டபின் ஷக்தியும் சஞ்சனாவும் கிளம்பத் தயார் ஆகினர்.

"நாங்க அப்ப கிளம்புறோம். நீ எப்போ அந்த பக்கம் வர்ர?"

"ஒரு இரண்டு நாள்ல வாரேன்"

"கண்டிப்பா வரணும் இல்லை வந்து வண்டில போட்டு உன்னை தூக்கிட்டு போயிருவேன்" சற்று சீரியசாகவே கூறிவிட்டு ஷக்தி விடை பெற்றுக்கொண்டான்.

அவர்களை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்து அமர்ந்த அஷோக்கிற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது தன் நண்பனுக்கு அவன் மனம் போல் ஒரு தங்கமான பெண் வாழ்க்கைத் துணையாக கிடைத்திருப்பதை எண்ணி. எப்படி இருந்த ஷக்தி இப்படி மாறி விட்டான். காதல் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது என்று நினைத்து சிரித்துக் கொண்டவன் தன் கிட்டாரை எடுத்துக் கொண்டு பால்கனியை நோக்கி சென்றான்.

"என்ன இப்படி சொல்லாமல் கொல்லாமல் சர்ப்ரைசா இங்க கூட்டிட்டு வந்துட்ட?" போகும் வழியில் கேட்டால் சஞ்சனா.

"அஷோக் பத்தி உன்கிட்ட சொல்லனும் சொல்லனும்னே இருந்தேன் சஞ்சனா ஆனால் இடைல ஏதாவது ஒரு பிரச்சனை வந்து சொல்ல வந்தது மறந்து போய்ரும்" நிஜமாக வருந்தினான் ஷக்தி.

"அவன் அம்மா அப்பாலாம் எங்க?"

"இது அவங்க பரம்பரை வீடு. ஸ்கூல் படிக்கும் போது இங்க தான் இருந்தான். அப்புறம் இவன் யூஎஸ் போய்ட்டான். இவன் அக்கா கல்யாணம் பண்ணி யூகேல செட்டில் ஆயிட்டா. அம்மா, அப்பா இப்போ அக்கா கூட யூகேல இருக்காங்க."

"அஷோக் எதுவும் டிப்ரஷன்ல இருக்கானா ஷக்தி?" சஞ்சனா திடுமெனக் கேட்க ஷக்தி அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.

"உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சர்யமாக கேட்டான் ஷக்தி.

"I have also been there shakthi. அது இல்லாமல் நான் ஒரு டாக்டர்" இதை சொல்லும் போது அவள் முகத்தில் ஒரு பெருமிதம்!

ஷக்தி அவனாகவே அஷோக் பற்றி சொல்லத்தான் ஆரம்பித்தான். ஆனால் அதற்கிடையில் சஞ்சனா அதை கண்டுபிடிப்பால் என்று ஷக்தி நினைக்கவில்லை. அஷோக் இவர்களோடு மிக சகஜமாகத்தான் பேசிச்சிரித்தான். ஷக்தி கூட நினைத்துவிட்டான் நண்பன் இயல்புக்கு திரும்புகிறான் என்று. ஆனால் இவள் கண்டுபிடித்துவிட்டாலே பெருமையாக இருந்தது ஷக்திக்கு.

"அஷோக் யூஎஸ்ல ஒரு வெள்ளைக்கார பொண்ணை லவ் பண்ணிட்டு இருந்தான். இன்ஃபாக்ட் அவங்க இரண்டு பேரும் 2 வருஷமா ஒன்னா ஒரே வீட்டுல வாழ்ந்துட்டு இருந்தாங்க. நெக்ஸ்ட் இயர் இந்தியாவுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிறதா கூட இருந்தாங்க. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு Gun shootல அவ இறந்துட்டா. அவ ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வர்ர வழியில இரண்டு Gang ஒருத்தரை ஒருத்தர் shoot பண்ணிட்டு இருந்து இருக்காங்க. எதிர்பார்க்காத சமயம் ஒரு புல்லட் இவ மேல பாய்ஞ்சிறிச்சு. ஸ்ப்பாட்லயே அவுட். இவனுக்கு பாடி மட்டும் தான் கிடைச்சது. எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் மெஷின் மாதிரி வேலை பார்த்துட்டு இருந்திருக்கான். இப்படியே இறுகிப்போய் இருந்தா இவனுக்கு ஏதும் ஆகிறுமோன்னு பயந்துக்கிட்டு அவன் கம்பெனியே அவனை பெய்ட் லீவ்ல பலவந்தமா இந்தியா அனுப்பி வெச்சிருக்காங்க. அவன் அம்மா அப்பா இன்னும் ஒரு வாரத்துல இங்க வந்துருவாங்க. அவன் அவளை ரொம்ப லவ் பண்ணான். Life is very cruel at times! வாழ்க்கைங்கறது எந்த ஒரு உத்தரவாதத்தோடயும் வர்ரது கிடையாது. நாளைக்கு என்ன நடக்கும்னு யாராலையும் சொல்ல முடியாது. இருக்கும் வரை சந்தோஷமா வாழுவோம்"

ஷக்தி பேச பேச சஞ்சனா அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள். ஜேசுதாஸ் தனியாக பாடிக் கொண்டு இருந்தார்.

"கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ
பாவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாறக்கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம் பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட

வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே......."

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro