அத்தியாயம் (7)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆச்சி பற்றியும் கனகாவின் விவஸ்த்தையற்ற பேச்சு பற்றியும் நன்கு அறிந்தவள் ஆதலால் வீண் விவாதங்களை தடுக்கும் படியாக அன்று அதிகமாக சமையல்கட்டை விட்டு தலை காட்டவில்லை வாசுகி.

வாசுகி வகை வகையாக சமைத்ததை தாயும் மகளுமாக குறை கூறிக் கொண்டே வயிறார உண்டு முடித்தவர்கள், தாங்கள் வந்த காரியத்தை கச்சிதமாக செய்து முடித்த திருப்த்தியுடன் ஒரு வழியாக நடையை கட்டினார்கள்.

மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது சஞ்சனாவுக்கு!!

மதிய சாப்பாட்டை விடவும் ஆச்சியும் கனகாவும் போட்ட போடு வயிற்றை நிரப்பி இருக்க, மாலை தேநீருக்காக கீழே செல்லாமல் கட்டிலிலேயே படுத்து இருந்தாள் சஞ்சனா. கதவு தட்டப் படும் சத்தம் கேட்க கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

''யாரு.....''

''நான் தான்க்கா... அம்மா டீ போட்டு குடுத்து விட்டாங்க'' அறிவித்தான் சின்னா''

சின்னாவின் குரலைக் கேட்டதும் கண்களில் ஒரு உற்சாகம் தோன்றியது சஞ்சனாவுக்கு. அவளே சின்னாவை அழைத்து பேச வேண்டும் என எண்ணிக் கொண்டு இருந்தாள்.

''உள்ள வா சின்னா'' அன்பான குரலில் சஞ்சனா அழைக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சின்னா. உள்ளே நுழைந்தவன் நேராக வந்து சஞ்சனாவின் கைக்குள் தேநீர் கோப்பையை திணித்தான்.

''என்னக்கா உடம்புக்கு முடியலியா??'' பாசமாக வினவினான் அவன்.

''அதுலாம் ஒன்னும் இல்லைடா சும்மா படுத்து இருந்தேன். நீ ஏன் நிக்கற வா வந்து இப்படி உட்காரு'' சஞ்சனா வழி விட பூனைக்குட்டி போல சென்று அருகில் அமர்ந்து கொண்டான் சின்னா.

''ஆச்சியும் கனகா அத்தையும் பேசினது உனக்கு வருத்தமா இருக்கா?? தேனீரை சுவைத்த வண்ணம் சின்னாவைப் பார்த்து கேட்டாள் சஞ்சனா.

''இல்லையே...... எப்போதுமே ஆச்சியும் கனகாம்மாவும் என்கிட்டே அப்படித் தானே பேசுவாங்க..... ஆனால் உங்களை பத்தி தான் அவங்க புரிஞ்சுக்காம பேசிட்டாங்க.

டாக்டர் படிப்பு எவ்வளவு பெரிய படிப்பு!! அது புரியாமல் கண்டபடி பேசிட்டாங்க'' குறைப்பட்டான் அந்த பெரிய மனிதன்.

தான் திட்டுவாங்கியத்தை பொருட்படுத்தாமல் சஞ்சனாவுக்காக பரிந்து பேசிய அந்த குழந்தை மனம் சஞ்சனாவுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அதை காட்டிக்கொள்ளாமல் குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்,

''நான் படிச்சு டாக்டர் ஆன கதை இருக்கட்டும். நீ ஏன்டா பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிற??''

''அம்மாக்கு அப்பறமா நான் பள்ளிக்கூடம்லாம் போறதை விட்டுட்டேன்க்கா..''

''நீ பள்ளிக்கூடம் போகாமல் இப்படி சுத்திட்டு இருந்தால் உன்னை எல்லாரும் அப்படி தான்டா பேசுவாங்க.

நீ படிச்சு முன்னுக்கு வாறது உங்கம்மாவுக்கு சந்தோஷமா இல்லை நீ இப்படி கண்டவங்ககிட்டல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்கறது உங்கம்மாவுக்கு சந்தோஷமா???''

''அம்மால்லாம் ஒன்னும் சந்தோஷப்பட வேண்டாம்'' என உரத்த குரலில் சொன்னவன்,

சஞ்சனா மௌனம் சாதிக்க அவனாகவே தொடர்ந்தான்.

''நான் எங்கம்மா வயித்துல இருந்தப்பவே எங்கப்பா எங்கம்மாவை விட்டுட்டு போயிட்டாரு. எங்கம்மா பங்களாவுக்கு வேலைக்கு வரும் போதெல்லாம் குழந்தைல இருந்தே என்னையும் தூக்கி வந்து பக்கத்துல போட்டுக்கும். எங்க போறதுன்னாலும் என்னையும் ஒரு கையில தூக்கிட்டு தான் போகும்.

எனக்கு ஆறு வயசானப்போ என்னை பள்ளிக்கூடத்துல சேக்கரதுக்கும் கூட எங்கம்மா என்னை தூக்கிட்டு தான் போச்சு. எங்கம்மாவை பார்த்து பைத்தியக்காரி, ஊர்ல இல்லாத புள்ளைய பெத்து வச்சுருக்கான்னு எல்லாரும் பார்த்து சிரிப்பாங்க. அப்போ கூட எங்கம்மா என்னை கீழேயே விடாது.

நானும் எங்கம்மா பின்னாடியே போய்க்கிட்டு இருப்பேன். அம்மா சமையல் பண்ணும் போது அடுப்பங்கரைல இருப்பேன். பாத்திரம் தேய்க்கும் போது அங்க போய் உட்கார்ந்துப்பேன். அம்மான்னா ரொம்ப உயிர் எனக்கு.

ஒரு நாள் ஜுரம்னு சொல்லி படுத்திச்சு. மருந்து மாத்திரை எதுனா வாங்கிக்கலாம்னு சொன்னதுக்கு கஷாயம் காச்சி குடிச்சா சரி ஆகிரும்னு சொல்லிச்சு. நானும் எங்கயும் போகாமல் அம்மாவை ஒட்டியே படுத்து இருந்தேன்.

அன்னிக்கி ராத்திரி பூரா நெஞ்சுல கைய வச்சிக்கிட்டு பெருசு பெருசா மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கிட்டு படுத்து இருந்திச்சு. காலைல நான் மட்டும் தான் எழுந்தேன். அம்மா எழுந்துக்கலை. என்கிட்டே சொல்லிக்காமல் கூட போயிரிச்சு.

அதுக்கு அப்புறம் நான் எங்கயுமே போறது கிடையாது. சின்னையா என்னை இங்கேயே தங்க வச்சுக்கிட்டார். அம்மா இங்க பண்ண வேலை லாம் எனக்கு அத்துப்படி. அதைலாம் பார்த்துக்கிட்டு இங்கயே இருந்துட்டேன்'' விழிகள் குளமாக ஒரு வழியாக சொல்லி முடித்தான் சின்னா.

சஞ்சனாவுக்கும் அழுகை வரும் போல இருந்தது. நெஞ்சு லேசாக வலித்தது. இத்தனை சிறிய வயதில் எத்தனை சவால்கள். ஆனாலும் வாழ்கையை எவ்வளவு துணிவாக எதிர்கொள்கிறான் இந்த சின்னா. சின்னாவுக்கு சிறு வயது முதல் விதி கொஞ்சம் கொடூரமாக தான் இருந்து இருக்கின்றது.

சிலரை பிரச்சினைகள் விடாது துரத்துகின்றன. சிலரோ பிரச்சினைகளை விடாது துரத்துகின்றனர்.

இதில் சின்னா முதல் ரகம் என்றால் சஞ்சனா இரண்டாம் ரகம். தான் வாழ்க்கையில் விட்ட பிழைகளை எண்ணி முதன்முதலில் வெட்கப்பட்டாள் சஞ்சனா.

அனுதின வாழ்க்கையில் நாம் முகம் கொடுக்கும் சம்பவங்களைப் பார்க்கிலும் சிறந்த படிப்பினை வேறெதுவும் இல்லை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு பாடம்.

ஆனால் சில சமயங்களில் நாம் அந்த பாடத்தை கற்றுக்கொள்ளும் இடமும் நபரும் தான் விநோதமாக அமைந்து விடுகின்றனர்.

நாம் வாழும் கூட்டை விட்டு நாம் வெளியே வரும் பொழுது தான் நாம் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.

கடவுள் தனக்கு கொடுத்த அன்பான குடும்பத்திற்காகவும் குறை அற்ற வாழ்க்கைக்காகவும் சஞ்சனா மனதுக்குள் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டாள்.

''சரி உனக்கு பள்ளிக்கூடம் போக பிடிக்கலை. நான் உனக்கு தினமும் பாடம் சொல்லித் தரட்டுமா???'' பேச்சை மாற்றும் விதமாக உற்சாகம் பொங்கும் குரலில் கேட்டாள் சஞ்சனா.

சஞ்சனாவின் உற்சாகம் சின்னாவையும் தொற்றிக்கொள்ள ஓகே என்று சொல்லி தன் கட்டை விரலைத் தூக்கிக் காட்டினான் சின்னா.

''குட் பாய்.. நாளைல இருந்து வாரத்துல 3 நாள் சரியா 6 மணிக்கு ஒரு நோட் அப்புறம் பென்சில் எடுத்துக்கிட்டு நீ என்னோட ரூமுக்கு வந்துரனும் சரியா??'' ஒரு குருவாக அதிகாரத் தோரணையில் கேட்டாள் சஞ்சனா.

''ஓகே மிஸ்'' கிண்டலாக பதில் அளித்தான் சின்னா.

''சரி.... நீ என்னோட முதல் சிஷ்யபிள்ளையா சேர்ந்து இருக்க. நான் உனக்கு சந்தோஷமா எதாச்சும் கொடுக்கணும்னு நெனைக்கிறேன். உனக்கு என்ன எல்லாம் பிடிக்கும்???''

ஆட்காட்டி விரலைத் தாடையில் தட்டி மேலே பார்த்து யோசனை செய்தவன், முகத்தில் லேசாக வெட்கம் படர,

''எனக்கு ஷக்தி ஐயா போல ஸ்டைல்லா சட்டைலாம் போட்டுக்கிட்டு அப்புறம் ஷக்தி ஐயா போல வாசனைலாம் நெறைய போட்டுக்கணும்னு ஆசை'' என்றான்.

க்களுக்.... என்று சிரித்து வைத்தாள் சஞ்சனா.

பின் ஏதோ தோன்ற சட்டென்று தன் அலுமாரியை திறந்தவள் இரண்டு பெரிய ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி கோலோன் பாட்டில்களை எடுத்து சின்னாவுக்கு கொடுத்தாள்.

''இந்தா இதை வச்சுக்கோ. நல்ல வாசனையா இருக்கும். தினமும் என்கிட்டே படிக்க வரும் பொழுது முகம் கை கால் கழுவி, நல்ல துவைச்சு போட்ட டிரஸ் மாட்டிக்கிட்டு, இதெல்லாம் பூசிக்கிட்டு வரணும் சரியா??'' ஒரு தாயாக அறிவுரை வழங்கினாள் சஞ்சனா.

பாட்டில்கள் இரண்டும் கண்ணைக் கவர, சஞ்சனாவின் அன்பு நெஞ்சை நிறைக்க சம்மதம் தெரிவிக்கும் விதமாக தலையை மட்டுமே ஆட்டினான் சின்னா.

''சரி இப்போ நீ கிளம்பு'' என்று சொல்லி சஞ்சனா அவனுக்கு விடை கொடுக்க சின்னா வாசலை நோக்கி நடந்தான். சின்னாவை வாசலில் வைத்து மறுபடியும் வழி மறித்தவள்,

''விஜய் மாதிரி அஜித் மாதிரி ஓகே. அது என்னடா ஷக்தி ஐயா மாதிரி?? அவர் என்ன பெரிய ஹீரோவா??'' நக்கல் குரலில் சின்னாவை சீண்டிப் பார்த்தாள் சஞ்சனா.

''விஜய் அஜித் லாம் நடிகர்கள்க்கா. ஷக்தி ஐயாவுக்கு நடிக்கத் தெரியாது.

எங்கம்மா கடைசி காரியம் வரை பெத்த புள்ளையாட்டம் அங்க இங்க நகராமல் நின்னு செஞ்சு முடிச்சாரே ஷக்தி ஐயா அவரு நடிகன் கிடையாது, நல்ல மனிதன்!!!''

வாசலில் நின்று சொல்லிவிட்டு படிகளில் தாவி குதித்து ஓடினான் சின்னா.

சின்னாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுளீரென்று இருந்தது சஞ்சனாவுக்கு. வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவைத் தேடும் தேடலில் தான் நல்ல மனிதர்களை அடையாளம் காணாமல் விட்டு விட்டோமோ என்ற கேள்வி தோன்றியது அவளுக்கு.

ஷக்தி ஒரு நல்ல மனிதன் ஒரு சூப்பர் ஹீரோவும் கூட என்று சொல்லிக் கொண்டது அவள் உள்மனது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro