4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

4-வனிதா பார்வையில் (தொடர்ச்சி).

என் வாழ்வில் நான் சுதந்திரம் என்பதை பெற பல வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்தியாவுக்கு எப்படி பல கஷ்டங்களின் பின் சுதந்திரம் கிடைத்ததோ அது போலவே எனது சுதந்திரமும் பல கஷ்டங்களை கொண்டது.

பதின் மூன்று வயதில் பூப்பெய்திய நாள் தொடக்கம் என் வாழ்வில் கஷ்டம்தான். என் தந்தை ஒரு வித்தியாசமான பிறவி. வீட்டில் இருக்கும் பெண்களை மனிதர்களாக மதிக்க தெரியாதவர். என் தாய் எப்போதும் அவர் முன் ஊமையாகவே இருப்பாள். என் தந்தை எதை கூறினாலும் அமைதியாக கேட்டுக் கொள்வாள். எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். பெண்களை பற்றிய என் தந்தையின் எண்ணம் மிகவும் கேவலமானது. பெண்ணானவள் படுக்கவும், பாத்திரம் தேய்க்கவும் மாத்திரமே  என்று அவரின் புத்தி கெட்ட நண்பர்களிடம் பேசுவதை என் காதால் நானே கேட்டிருக்கின்றேன். எனக்கும் என் தந்தை மீது மிகவும் பயம். எதிர்த்து எதுவுமே பேசியதில்லை. அப்படி ஏதும் பேசினால் என் உடலின் ஏதாவது ஒரு இடத்தில் அன்று பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் சூடு இருக்கும்.

கடவுளின் அருளால் எனக்கு காலேஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தந்தை என்ன கூறுவாரோ என்ற பயம் இருந்த போதிலும் அவர் என்னை காலேஜ் செல்ல அனுமதித்தார். அனுமதி கொடுக்கும் போது அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் எனக்கு ஞாபகம் உண்டு.

"நீ காலேஜுக்கு போக பர்மிசன் கொடுத்ததற்கான காரணம், நீ படிச்சி முன்னுக்கு வரனும் என்பதற்காக இல்லை. அந்த ராமசாமி பொண்ணு காலேஜ் போயி எவன் கூடவோ ஒடிப்போனாள்ல. அப்போ அவன் சொன்னான்னா 'இந்த பொட்டச்சிங்கள வீட்டோட அடக்கி வைக்கனும். இல்லன்னா நம்ம மானம் மரியாதை எல்லாம் சந்தி சிரிக்க வெச்சிடுவாளுங்க' . அதுக்கு நான் 'நம்ம எப்படி அவங்கள வளர்க்குறோம் என்கிறத பொருத்துதா இருக்கு. வெளுக்க வேண்டிய இடத்துல வெளுத்தா எல்லாமே சரியா நடக்கும்'னு சொன்னேன். ஆனா அவன் ஏத்துக்கல. முடிஞ்சா உன்ன காலேஜுக்கு அனுப்ப சொன்னான். என் தன்மானத்தை அது சீண்டிடிச்சி. எச்சக்கல நாய், அவனுக்கு என்ன பத்தி தெரியல, என் வீட்டுல இருக்குற பொம்பளைங்க நான் எது சொன்னாலும் கேட்பாளுங்கனு. நீ காலேஜ் போற. படிக்கிறியோ இல்லையோ ஒழுக்கமா நடந்துக்கிற. ஏதும் தப்பு தண்டா பண்ண அப்புறம் தெரியும்ல என்ன நடக்கும்னு". இதுதான் நான் காலேஜ் போக காரணம்.
ஓடிப்போனா ராமசாமி மகள் அனிதா வாழ்க ! ராமசாமி வாழ்க! அவன் கொற்றம் வாழ்க! அவன் குடி வாழ்க!

காலேஜ் போனேன். வெறித்தனமா படிச்சேன். இந்த படிப்பு ஒன்னுதான் என்னோட சுதந்திரத்த பெற்றுத் தரும்னு தெரியும். இருந்தாலும் என் தந்தையை மீறி அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமா? அதற்கு பதில் என்னிடம் இல்லை. என் தந்தை என்னை ஏனோ தானோ என்றுதான் படிக்க அனுப்பினார். ஆனால் நான் பிகாம் உடன் சேர்த்து ஆங்கில இலக்கியமும் படித்தேன். படித்தேன் படித்தேன் படித்துக் கொண்டே இருந்தேன். சிறியதாக ஒரு இடைவெளி கிடைத்தால் கூட படித்தேன். லைப்ரரியில் படித்தேன். மர நிழலில் படித்தேன். ஏன் கேன்டீனில் சாப்பிடும் போது கூட படித்தேன். படிப்பதற்கு கொஞ்சம் கூட எனக்கு சலிப்புத் தட்டவே இல்லை. Shawsank Redemption இல் அந்த ஹீரோ சிறிய உளியை வைத்து மிகப்பெரிய சுரங்கப்பாதையை அமைத்தாரே, அதே போல. ஆனால் நான் படிப்பதையும் ஒரு ஜீவன் ரசித்தது எனக்கு தெரியாது.

என்னை ரசித்தவனால்தான் இன்றைக்கு எனக்கு இப்படியான தலை குனிவு. ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. என் சுதந்திரத்தை என் தந்தையின் அடக்குமுறையை தாண்டி அனுபவிக்க முடியும் என்ற தைரியத்தை தந்தவன் அவன். காதலை அணு அணுவாக எனக்கு கற்பித்தவன். ஏன் காமத்தையும் கூட. அவந்தான் என் எல்லாமும் ஆகிப்போனவன், ராஜா.

கடவுள் நாம் எதிர்பாராத வகையில் நமக்கு சில நன்மைகள் செய்வார். என் வாழ்வில் அவர் செய்த முதல் நன்மை, ராமசாமி என் அப்பாவை தூண்டிவிட்டது. இரண்டாவது, என் படிப்பு முடிந்த இரண்டாவது வாரம் என் தந்தை பக்கவாதத்தால் படுக்கையில் விழுந்தது. வீட்டில் பணத் தேவை அதிகமாகியது. வேறு வழியில்லை. நான் வேலைக்கு சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம். என் தந்தையால் கூட எதுவுமே செய்ய முடியாத நிலை. அந்த நிலையிலும் அவரில் அதட்டலும், ஆர்ப்பாட்டமும் குறையவில்லை.

" இவனாலதான் ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சி, வேலைக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு ஊர் மேய்ஞ்ச, அப்புறம் உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றார். அதில் எச்சரிக்கை இருந்தது. கூடவே பயமும் இருந்தது. அந்த பயம் அவரின் உடல் நிலையை பயன்படுத்தி எங்கே நான் என் இஷ்டத்துக்கு இருந்துவிடுவேனோ என்பதுதான். என் தந்தையின் பயத்தை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. பொன்னியின் செல்வனின் வரும் சுந்தர சோழரைப்போல படுக்கையில் கிடந்தாலும் வெட்டி வீராப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இப்போது கிடைத்திருப்பது பொன் முட்டை இடும் வாத்து. அதை பொறுமையாகத்தான் கையாள வேண்டும். அவசரப்பட்டு அறுத்துவிடக் கூடாது.

"இல்லப்பா நீங்க சொல்ற மாதிரியே பண்றேன். தப்பா எதுவுமே பண்ண மாட்டேன்பா" என்று முழுப் பொய்யை கூறினேன். என் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க தயாரானேன்.

எனக்கு தெரிந்து என் வீட்டில் நான் கூறிய முதல் பொய். எங்கள் வீட்டில் தவறு ஏதும் செய்து விட்டால் உண்மையை ஒப்புக்கொள்வதே சிறந்தது. செய்த தவறில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக ஏதும் பொய் கூறி மாட்டிக்கொண்டால், தண்டனை இரட்டிப்பாகும். ஒரு கரண்டிக்கு பதிலாக இரண்டு கரண்டிகள் பழுக்கக் காய்ச்சப்படும்.

நான் படித்த அதே காலேஜில் பகுதி நேர ஆங்கில இலக்கியம் கற்பிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாள் எங்கள் கல்லூரியில் வேலை செய்யும் சக விரிவுரையாளர் என்னிடம் கேட்டார்.

" வனிதா, உன் வீட்ல கஷ்டம்னு கேள்விப்பட்டேன். நீ பிகாம் படிச்சிருக்கன்னு தெரியும். எனக்கு தெரிஞ்ச ஒரு கம்பனியில உதவி கணக்காளர் பதவி இருக்கு. போறியா?" என்று கேட்டார். கடவுள் என் பக்கம் இருக்கின்றார். எதிர்பாராதவகையில் உதவிக்கு மேல் உதவி. நான் உடனே சரி என்றேன். இருந்தாலும் எனக்கு இந்த பகுதி நேர விரிவுரையாளர் வேலையும் வேண்டும்.

" சார், அங்க பார்ட் டைம் ஆ வேலை பார்க்க முடியுமா?" என்று கேட்க அவர் ஒற்றை சொல்லில் "முடியும்" என்றார். நான் அப்படி கேட்க காரணம்  கம்பனியில் வேலை என்றால் என் தந்தை அனுமதிக்க மாட்டார். கம்பனியில் ஆண்கள் அதிகமாக இருப்பார்களாம். நான் கெட்டுப் போய் விடுவேனாம். கல்லூரியில் எனது வகுப்பை காலை நேரத்துக்கு முழுமையாக மாற்றித்தர நிர்வாகத்திடம் கேட்ட போது அதற்கு அவர்கள் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. காரணம் ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வமாக இருந்த மாணவர்கள் மிக சொற்பமே.

வீட்டை பொறுத்த வரை நான் காலேஜுக்கு வேலைக்கு செல்கின்றேன். ஆனால் நிஜத்தில் மதியத்திற்கு முன் காலேஜிலும் மதியத்தின் பின் கம்பனியிலும் வேலைக்கு போனேன். உண்மை ஒரு நாள் தெரிய வரும்போது என்னாகும் என்ற பயம் இருந்தாலும், எனது சம்பாதித்யம் எனக்கு தைரியத்தை கொடுத்தது.  கல்லூரியிலும் சரி, கம்பனியிலும் சரி என் தந்தை அளவுக்கு யாரும் என்னை கேவலப்படுத்தவில்லை. அதுவரைக்கும் சந்தோசமே.

முதல் மாதம் சம்பளம் வந்ததும் சம்பள கவரை என் தந்தையிடம் கொடுக்க அதில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார். அவர் முகத்தில் ஆச்சரியம் இருந்தது.

"இவ்வளவு சம்பளம் உனக்கு யார் கொடுக்குறா?". அவர் கேள்வியில் இருந்த பொருள் 'எவன் கூட படுத்து இந்த காச வாங்கின'. இதை உணர்ந்து கொள்ள அவரின் பார்வை ஒன்றே போதும். முன்பென்றால் மனதில் நினைத்ததை அவர் வாய் விட்டுக் கேட்டிருப்பார். இப்பொழுது முடியாத நிலை. என் சம்பாத்யம் வீட்டுக்கு மிகவும் அவசியம்.

நான் பதில் எதுவும் கூறவில்லை. அதற்குள் அவருக்கு இருமல் வந்துவிட்டது. இந்த இருமலோடு அவர் பரலோகம் போகக்கூடாதா என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தேன்.

----------------------------------------

வட்டீஸ்..
8 அப்டேட் எழுதிட்டேன். தினமும் ஒரு அப்டேட் என்று எழுதுகின்றேன். வெள்ளிக்கிழமை மட்டும் எழுதுவதில்லை. நவம்பர் இறுதிக்குள் இந்த கதை முடிவடைந்து விடும். கதையின் போக்கில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால், அல்லது கதையில் இருக்கும் கதாபாத்திரங்களிடம் ஏதும் கேள்விகள் இருந்தால் மெசேஜ் அல்லது பின்னூட்டம் இடுங்கள். பதில் அந்த கதாபாத்திரத்தின் பார்வையில் வழங்கப்படும்.

அப்டேட்டில் இருக்கும் கவர் பிக் செய்து கொடுத்தது - praveenathangaraj

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro