33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இந்த கலோபரம் எல்லாம் முடிந்த அடுத்த கனமே ஜனனியும் சாரதாவும் அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. ஜனனிக்கு இந்த உலகையே வென்ற ஒரு சந்தோசம். சாரதாவுக்கோ நடந்தது சற்று இசகு பிசகாகி இருந்தாலும் என்னவாகி இருக்கும் என்ற பயம். சாரதாவின் மன ஓட்டத்தை புரிந்த ஜனனி அவளுக்கான நேரத்தை கொடுத்தாள். இங்கு யார் தாய் யார் மகள் என்பது எழுதும் எனக்கே தெரியவில்லை.

வீட்டின் காலிங்க் பெல் அடிக்க ஜனனிதான் கதவை திறந்தாள். அங்கு ஜீவாவை கண்டதும் அவள் இதழ்கள் ஒரு பெரிய வெற்றிப் புன்னகையை சிந்தியது. இருந்தாலும் ஜீவா அதை கண்டு கொள்ளவில்லை. சாரதா ஹாலில் அமர்ந்திருக்க ஜீவாவே ஆரம்பித்தான்.

" மிஸ் எனக்கு ஜனனி கிட்ட கொஞ்சம் தனியா பேசனும். உங்க அனுமதி கிடைக்குமா?" என்று கேட்க அவள் பதில் எதுவுமே கூறாமல் ஹாலில் இருந்து படுக்கை அறைக்குள் சென்றாள். இருந்தாலும் ஹாலில் என்ன நடக்கின்றது என்பதை கேட்காமல் இல்லை.

" என்ன ஜீவா, உன் ரூட்டு க்ளியர் ஆகிடிச்சி போல. எங்க வீட்டு ப்ராப்ளம் எல்லாத்தையுமே நான் சால்வ் பண்ணிட்டேன். உங்க வீட்டுல என்னாச்சி" என்க பளாரென்று ஜீவா ஜனனியை அறைந்துவிட்டான். அடி என்றால் அடி அப்படி ஒரு அடி. என்னதான் கிக்பாக்சிங்கில் ஆயிரம் அடி அவள் வாங்கியிருந்தாலும் இப்படி ஒரு அடியை அவள் கண்டதே இல்லை. இந்த அடியில் ஒரு தந்தையின் பரிவு இருந்தது. அவளின் வாழ்க்கையை பற்றிய அக்கறை இருந்தது. தனது மனதுக்கு நெருக்கமான பெண்ணின் மீதான அக்கறை இருந்தது. " எதுக்கு என்ன...." என்று மறுபடியும் ஜனனி ஏதோ கேட்க வர அடுத்த அறையும் கிடைதது.

" ஏதாச்சும் பேசின கொன்றுவேன். உனக்கு என்ன பெரிய மயிருன்னு நினைப்பா. உன் இஷ்டத்துக்கு எல்லாமே பண்ற. நீ என்ன பண்ண பார்த்தேன்னு உனக்கு புரியுதா? நீ பண்ண வேலையால உனக்கு ஏதும் ஆகியிருந்தா உங்கம்மாவ நினைச்சி பார்த்தியா? நீ இப்படி ஆகுறதுக்குத்தான் அவங்க உன்மேல இவ்வளவு பாசம் வெச்சி வளர்த்தாங்களா? சரி, எல்லா அம்மாக்களும் அவங்க குழந்தைங்க மேல பாசமா இருப்பாங்க. ஆனா உங்கம்மா அப்படியா. அவங்க வாழ்க்கையில பாதியே உனக்காகத்தானே போச்சி. இத ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற. உன் துடுக்குத்தனத்தாலயும் உன் விளையாட்டுப் புத்தியினாலயும் உங்கம்மாவ ஏன் கஷ்டப்படுத்துற. எனக்கு கண்டிப்பா தெரியும் இது எல்லாமே உன் வேலைதான்னு. கண்டிப்பா உங்கம்மா இப்படி ஒரு முடிவ எடுத்திருக்க மாட்டாங்க. ஏன் இப்படி பண்ண" என்றான். வாங்கிய அடியில் உறைந்திருந்த ஜனனி பேச ஆரம்பித்தாள்.

" எங்கம்மாவுக்கு எதுக்கு எடுத்தாலும் அவங்க தம்பி அம்மாவ நினைச்சி பயம். அந்த பயம் முழுசா போகனும்னா அந்த ரெண்டு ஜீவனும் எங்க வாழ்க்கைக்குள்ள இனிமே வரவே கூடாதுன்னு முடிவெடுத்தேன். அதனாலதான் நான் இப்படி பண்ணேன். எனக்கு என்ன வயசு ஜீவா? பதினைஞ்சு ஆக போகுது. எங்கம்மாவுக்கு? இருபத்தொன்பது. இப்போலாம் எங்கம்மா அடிக்கடி இரவு நேரத்துல எந்திரிச்சி தலைக்கு குளிக்கிறாங்க. அது ஏன்னு எனக்கு தெரியும். அது எதுக்குன்னு தெரியாம இருக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை. என் வாழ்க்கைய நான் எப்படியாச்சும் வாழ்ந்துக்குவேன். ஆனால் எங்கம்மா வாழ்க்கை? அம்மாதான் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்கனுமா? ஏன் பொண்ணு அவ அம்மாக்கு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தா தப்பா? தப்பாவே இருந்துட்டு போகட்டும். எங்கம்மாவுக்காக நான் எது வேணாலும் செய்வேன். ஏன்னா அவங்க என் அம்மா. புரியுதா. ஏன்னா அவங்க என் அம்மா.

உனக்கு என்ன ஜீவா, ஊர்ல இருந்து வந்த, அழகா இருக்குற சாரதா மிஸ்ஸ பார்த்த, அவங்கள காதலிக்கலாமான்னு யோசிச்ச, அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கான்னதும் விலகி இருக்க பார்த்த, ஆனா அவங்க கடந்தகால வாழ்க்கை சரியா அமையலன்னதும் நீ வாழ்க்கை குடுக்கலாம்னு யோசிச்ச. அவ்வளவுதான் உன்னோட பங்கு எங்க கதையில. ஆனா நான் அப்படி இல்லையே. எனக்கு எட்டு வயசு இருக்கும் போதே எல்லாமே புரிய ஆரம்பிச்சது ஜீவா. எங்கம்மாவ எத்தனை பேரு அவங்க மாயாஜால பேச்சால அடைய பார்த்தாங்கன்னு எனக்கு தெரியும். தெருவுல இருக்குற மலிகை கடைக்காரன் முதல் ஸ்கூல்ல இருக்குற சில டீச்சர்ஸ் வரைக்குமே பண்ணாங்க. ஆனா அதுல நீ மட்டும் தனியா தெரிஞ்ச. உன் நோக்கம் எங்கம்மாவ அடையிறது இல்ல. அவங்க காயத்துக்கு மருந்தா இருக்கனும்னு நினைச்ச. அதுதான் எனக்கு உன்கிட்ட பிடிச்சது. இவ்வளவும் ஏன்? சனா அப்பா என்கிட்ட ஏன் அளவுக்கு அதிகமா அக்கறை எடுத்துக்கிட்டாருன்னும் எனக்கு தெரியும். ஆனா இரண்டு பொண்ணுங்க தனியா வாழும் போது யாரையும் பகைச்சிக்க முடியாது ஜீவா. எங்கம்மா இந்த காவாலி பசங்க எல்லோரையும் சமாளிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? உனக்கு எங்க தெரிய போகுது. நீதான் இன்னைக்கு வந்தவனாச்சே.

எல்லோர்கிட்டயும் எங்கம்மா சகஜமா பேசுவாங்க. ஏன்னா பேசித்தான் ஆகனும். ஒருத்தன்கிட்ட சகஜமா பேசி இன்னொருத்தன் கிட்ட பேசாம விட்டா அவன் எப்படி ஊருக்குள்ள கதைய வளர்த்துவிடுவான்னு தெரியும். எங்கம்மான்னா எனக்கு உசிரு ஜீவா. அந்த உசிருக்கு முன்னாடி என் வாழ்க்கை நீ சொன்ன அதே மயிருதான். இன்னொன்னு தெரியுமா, உன்ன கட்டிக்க எங்கம்மாவுக்கு இஷ்டம்தான். ஆனா அதுக்கு இடைஞ்சலா இருக்குறது என் வாழ்க்கை. அத சரி பண்ணனும்னா நான் இப்படி ஏதும் பண்ணாத்தான் ஜீவா முடியும். இனிமே அந்த ரவுடியும் அந்த கிழவியும் எங்கம்மா வாழ்க்கைக்குள்ள வரமாட்டாங்க. எங்கம்மாவ கெடுத்தவன்கிட்ட இருந்து டைவோர்ஸும் ஈசியா வாங்கிடலாம். ஏன்னா இப்போ தமிழ் நாட்டோட சென்சேசனல் நியூஸே எங்கம்மாதான். கண்ட கண்ட பீப் சாங்குக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ற இந்த மாதர் சங்கம் எல்லாம் எங்கம்மாவுக்கு ஒரு டைவோர்ஸ் வாங்கி கொடுக்கமாட்டாங்களா?" என்றாள்.

ஜனனியின் பேச்சை கேட்டு ஜீவா வாயடைத்து நின்றான். அவனுக்கு பேச்சே வரவில்லை. ஜனனியின் தன் அருகில் இழுத்தவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவளை தன் அணைப்பிலேயே வைத்திருந்தவன் அவளை விலக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்ணு. நாந்தான் உன் அப்பா. அம்மா சம்மதிச்சா மட்டும்தான் அப்பாவா இருக்கனுமா என்ன. யாரு ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலன்னாலும் நாந்தான் உனக்கு அப்பா" என்றவன் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான். ஜனனியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.

அறைக்குள் இருந்த சாரதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. ஜனனி தன்னை எவ்வளவு உன்னிப்பாக கவனித்திருக்கின்றாள் என்பதே அவளுக்கு மிகவும் சந்தோசமகாவும் அதே நேரம் கவலையாகவும் இருந்தது. தன் உடல் உஷ்னம் ஆகும் வேலைகளில் தான் குளிப்பது முதல் கொண்டு அவள் கவனித்திருக்கின்றாள் எனும் போது, சாரதாவுக்கு ஜனனி ஒரு தாயாக தோன்றினாள்.

அடுத்து தான் இனி என்ன செய்ய வேண்டும். ஜனனிக்கு வாக்கு கொடுத்தது போல ஜீவாவுடன் சேர வேண்டுமா? இல்லை மீண்டும் எனக்கு யாரும் வேண்டாம் என்று தனியாக இருக்க வேண்டுமா? சாரதாவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஜீவாவின் மனது சாரதாவுக்கு தெளிவாகவே தெரிந்தது. ஒரு வேலை தான் ஜீவாவை ஏற்றுக்கொண்டாலும் ஜீவா வீட்டில் தன்னையும் ஜனனியையும் ஏற்றுக்கொள்வார்களா? ஒரு வேலை ஏற்றுக் கொண்டாள்.... அதை நினைக்கும் போது அவள் கன்னம் இரண்டும் சிவந்தது. இதழின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகையும் தோன்றியது. ஆனால் தான் எடுக்க போகும் முடிவு ஜனனியை வாழ்க்கையை இனி எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்று நினைத்தாள்.

ஜீவா வீட்டை விட்டு போகும் வரையிலும் சாரதா வெளியே வரவில்லை. ஜீவாவும் எவ்வளவோ நேரம் இருந்து பார்த்தான், ஆனால் அவள் வெளியில் வரவில்லை. சாரதாவின் மனதில் இருக்கும் குழப்பம் தீர அதற்கான நேரத்தை அவளுக்கு வழங்க அவன் தயாரானான்.

ஜீவா சென்றுவிட்டான் என்று தெரியுந்ததும் சாரதா குளித்து புதிய ஆடை அணிந்து வந்தாள். வீட்டில் எதுவுமே சமைக்கவில்லை. ஜனனி ஸ்விக்கியில் ஆடர் செய்திருந்த உணவுகள் வந்திருந்தன. ஜனனியும் சாரதாவும் ஒன்றாகவே உணவை உண்டனர். ஜனனியின் கன்னத்தை பார்த்த போது அதில் ஜீவாவின் ஐந்து விரல்களும் பதிந்திருந்தது. இதை பார்க்க சாரதாவுக்கு கவலையாக இருந்தாலும் ஜீவாவுக்கு இல்லாத உரிமையா என்றும் தோன்றியது. இந்த எண்ணம் அவள் மனதில் வந்ததுமே சாரதாவுக்கு, தான் ஏன் நடப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒன்றை நினைத்து சந்தோசப்படுகின்றோம் என்று யோசித்தாள்.

" ஜனனி இன்னைக்கு உன்கூட தூங்கட்டுமா?" என்று சாரதா கேட்க ஜனனியின் கண்களில் கண்ணீர் வந்தது. இருவரும் ஜனனியின் அறையில் தூங்க தயாராகினர். தாயாக இருந்தவள் சேயாக மாறா சேயாக இருந்தவள் தாயாகி, சாரதாவை ஒரு குழந்தை போல முதுகில் தட்டிக் கொடுத்து உறங்கவைத்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro