🌚10🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உணர்ச்சியின் பிடியில் சிக்குண்டிருக்கும் எவரும் வார்த்தைகளை விடும் முன் ஒன்றுக்கு நூறு தடவைகள் யோசித்தே விடவேண்டும்.

பலபோது நாம் இவ்வாறு விட்டுவிடும் வார்த்தைகளே நம் வாழ்வை புரட்டிப்போடக்கூடியதாக அமைந்து விடும்.

நிகில் ரகுவரனும் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இன்று மாட்டி இருக்கிறான். சிறுவயதில் இருந்தே சனாவின் உற்ற நண்பனாக இருந்தவன், அந்த சனாவையே தன் வாழ்க்கை துணையாக தன் வாழ்வில் பெற வேண்டும் என்ற ஆசையில் இருந்தான். இதுவே சனாவின் விருப்பமும் கூட. அவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வாறானதொரு நெருங்கிய தொடர்பு, நெருங்கிய பந்தம் பிறப்பினாலேயே உருவாகியிருந்தது.

ஆனால் இன்று அந்த பந்தம் இருக்கிறதா என்றால் அதற்கான பதில் நிகில் பக்கத்தில் இருந்து உறுதியாக ஆமாம் என்று வெளியானலும் சனா இது தொடர்பாக மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள் என்பதே உண்மை. அதற்கு காரணம் நிகில் வாயினால் வெளியான ஒரு வார்த்தை.

அவனாக உணர்ந்து கூறிய வார்த்தை இல்லை அது. அவனுள் எழுந்திருந்த விரக்தியின் காரணமாக வெளியானது தான் அந்த வார்த்தை ஆகும்.

அன்று நடந்த சம்பவத்தின் பின் சனா நிகிலை  பார்ப்பதையோ பேசுவதையோ முற்றாக தவிர்த்து விட்டாள். ஆனால் அவனின் " Sorry & love u babiee" என்ற குறுந்தகவல் தினமும் அவள் கையடக்கத்தொலை பேசியை அலங்கரித்துக்கொண்டு தான் இருக்கும். இவள் இது வரை அதற்கு எந்த பதிலும் அனுப்பியதில்லை. அவள் பார்க்கிறாளா இல்லையா என்பதை கூட யோசிக்காமல் நிகில் தினம் தினம் அதை அனுப்புவான்.

அவனக்கு அவன் காதல் தேவதை அவன் வாழ்வில் வந்து மீண்டும் வசந்தம் வீச வேண்டும் என்ற அவா. சனாவோ நிகில் தன்னையும் தன் காதலையும் அவமானப்படுத்தி விட்டான் என்ற இயலாமையுடன் கூடிய கோபம்.

நிகில் வீட்டுக்கு கடைக்குட்டி. அவனுக்கு ஒரு அண்ணா மற்றும் ஒரு அக்கா. அப்பா ரகுவரன். சற்றே கடுமையானவர். தான் இயற்றுவதே சட்டம் தான் சொல்வதே சத்தியம் என்ற ரீதியில் சர்வாதிகார போக்கில் தான் தன் குழந்தைகளை வளர்த்தார். மூத்தவர் இருவரும் அதை பெரிதாக எடுக்கவில்லை என்றாலும் இளையவனான நிகிலுக்கு அது பெரிய பாதிப்பு.

அவனைப் பொறுத்த வரையில் அது அவனுக்கு நடந்த மோசடி. அவன் விரும்பி செய்ய எத்தனித்த எதுவும் அவன் வாழ்வில் நடைபெறவில்லை என்பதே அவனது கண்ணோட்டம். அவன் விரும்பிப் படிக்க விரும்பிய பாடசாலையில் அவன் நண்பர்களுடன் படிக்க அவனுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அவன் நண்பர்களுடன் சேர்ந்து தான் விரும்பும் கல்லூரியிலாவது படிக்கலாம் என்று இருக்கும் வேளையில் அதற்கும் சிவப்புக்கொடி காட்டிய ரகுவரன் அவனை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து அங்கு அனுப்பி வைத்தார்.

அந்த காலங்களில் தன் நண்பர்களுடன் சேர்த்து சனாவையும் மிகவும் தவறவிட்டான் நிகில். இப்படி தொடர்ந்து அவன் வாழ்க்கையில் அவன் நினைக்காத திருப்பங்கள். அவன் நினைத்தது நடந்தது எந்த விடயத்தில் என்றால் அவனது காதலில் மட்டும் தான். ஆனால் அதுவும் இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலைமை தான்.

தன் வெளிநாட்டு படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்துவிட்டு வந்தவன் மனதில், தான் சுயமாக தொழில் ஆரம்பித்து தனக்கான அங்கீகாரத்தை தானே தேடிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்தது. தன் தந்தை தொழில் துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் அவரது அங்கீகாரத்தின் ஊடாக தனக்கான இடத்தை பெறாமல் தானே சுயமாக உருவாக வேண்டும் என்று புது தொழில் ஆரம்பிக்கும் உத்தேசத்தை தன் குடும்பத்தவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினான்.

அவனது பேச்சுக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பை வெளிப்படுத்திய ரகுவரன் பணஉதவி செய்யவும் மறுத்துவிட்டார். அதை எதையும் சட்டை செய்யாதவன் வங்கி கடன் ஏற்பாடு செய்து அனைத்தும் முடிவடையும் தருவாயில் இருக்கும் போது அதை முடக்கிவிட்டிருந்தார் ரகுவரன். அவருக்கு அவர் மகன் அவரது தொழிலை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம். நிகிலின் அண்ணனும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறான்.

இந்த விரக்தியில், தான் செய்ய எத்தனிக்கும் எதற்குமே தன் தந்தை உடன் நிற்காமல் அவர் ஆசைகளையும் அவர் விருப்பங்களையும் தன் மீது திணிக்கிறார் என்ற கோபத்தில் உழன்று கொண்டிருந்த அன்றைய நாளின் மாலை மங்கும் நேரத்தில் அவன் தோளில் வந்து பதிந்தது சனாவின் கைகள்.

அதை எதையுமே உணரமுடியாத நிலையில் அமர்ந்து கொண்டிருந்த நிகில் சனாவின் அழைப்புக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருக்க. "நிகி" என்று இரண்டு மூன்று முறை சத்தமாக அழைத்து பார்க்க அதற்கும் எந்த பதிலும் வராமல் இருக்க அவனைப் போட்டு விளையாட்டாக ஒரு குழுக்கு குழுக்கினாள் சனா.

அதில் அவன் நினைவை அடைந்தாலும் அவனது விரக்தியோ கோபமோ சற்றும் குறைந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் இருந்த அவனது முக மாற்றத்தையும் கவனிக்க தவறினாள் சனா. சுயஉணர்வு பெற்ற அவனை நோக்கி "நிகி" என்று காதலோடு அழைக்க "உனக்கு இப்போ என்ன வேணும் சனா? எப்போ பாரு நிகி நிக்கினு சொல்லி தொல்ல பண்ணிக்கிட்டு" எரிந்து விழுந்தான் நிகில்.

இதை... இவ்வாறான நிகிலின் வார்த்தைகளை சற்றுமே எதிர்பார்த்திராத சனா கண்ணீர் நிறைந்த கண்களோடு அவனை எறிட்டு நொடியும் தாமதிக்காமல் அவன் அறையில் இருந்தும் அவன் வீட்டில் இருந்தும் வெளியேறினாள். இதுவே சனா நிகிலை நேருக்கு நேராக சந்தித்த கடைசிநாள். அன்றில் இருந்து அவளாகவே அவளது மனதுக்கு பல கட்டளைகளை இட்டு மாற்றிக்கொண்டுள்ளாள்.

நிகில் எத்தனையோ தடவைகள் சனாவை சந்திக்க முயற்சி மேற்கொண்டும் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. நவா சனாவை மாற்ற எடுத்த முயற்சிகள் கூட தோல்வியில் தான் முடிந்தன.

இவ்வளவு காலம் சனாவை அவளது போக்கிலேயே விட்டிருந்தான் நவா. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் சனாவுடன் இதைப்பற்றி பேசிய நவா அவளுக்கு இரண்டு மாத காலக்கெடு விதித்திருந்தான். அது அவளின் இறுதி முடிவுக்கான காலக்கெடு.

இன்றோடு அவளது முடிவை கேட்டு நவா அவளுக்கு அளித்த இரண்டு மாத காலம் முடிவடைகிறது.

அவன் அவளது முடிவை கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அந்த அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தான் நிகில்.

"ஹேய் எங்க கிளம்பிட்டடா?"
அவன் வந்திருக்கும் தோரணையில் எதையோ உணர்ந்தவனாக கேட்டான் நவா.

"அத உன் கிட்ட அப்புறமா சொல்றேன் நவா.
நா கொஞ்சம் சனா கூட பேசணும்." -நிகில்

நவா அவனை பார்வையாலே "என்ன" என்று கேட்க,
"அவ கூட கொஞ்சம் தனியா பேசணும் நவா.
ப்ளீஸ்."
என்றான்.

பார்வையாலே அவனுக்கு சம்மதம் அளித்தவன் அந்த அறையில் இருந்து வெளியேற அவன் சென்றதும் பெல்கனிக்கு சென்றான் நிகில்.

சனாவோ உணர்ச்சியற்று எங்கோ வெறித்தபடி இருக்க. அவளைவிட்டு சற்றே தள்ளி நின்றுகொண்டவன்,
"சனா..."
என்று மெதுவாக அழைத்துப் பார்த்தான்.

அவள் பதிலளிக்காமல் இருக்கவே மீண்டும் எத்தனை முறை அழைத்தாலும் அவள் பதிலளிக்க மாட்டாள் என்றாலும் அவள் தன் பேச்சை கவனிப்பாள்  என்பதை அறிந்தவன்,
"சனா நா செஞ்ச தப்புக்கு என்ன செஞ்சு உன் கிட்ட மன்னிப்பு கேக்குறதுன்னு எனக்கு சத்தியமா புரியல டா. நா அன்னேக்கி உன்ன அப்டி சொல்லிருக்க கூடாது. ஆனா நா இருந்த சிட்டுவேஷனும் எனக்கு அப்போ இருந்த மைண்ட்செட்டும் என்னையும் மீறி பேச வெச்சுருச்சு. அப்டியா ஒரு நிலைமையில வந்த வார்த்தை தான் அது.

இப்பவும் சொல்றேன் சனா.
சத்தியமா நா வேணும்னே அப்டி சொல்லவும் இல்ல. அதே போல எப்பவும் நா உன்ன தொல்லையா நினைச்சதும் இல்ல.

ஆனாலும் இனிமே நா உன்ன தொல்லை பண்ணவே மாட்டேன்டா.

லைஃப்ல எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு நா விரும்பிய படி கிடைச்சது என் காதல் மட்டும் தான்.
அந்த காதல் கூட கெடைக்காதுன்னு இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன்.

உன்ன கல்யாணம் பண்ணி நல்ல கணவனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஆனா...

நிச்சியமா உனக்கு என்ன விட நல்ல லைஃப் பாட்னர் கிடைப்பான் சனா. குட் லக். அண்ட் குட் பை"

என்று இறுகிய மனதோடு சொல்லி முடித்தவன் அவ்வறையை விட்டு வெளியேறும் போது அவனையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை வேகமாக துடைத்துக்கொண்டவன் வேகமாக கீழே இறங்கிச் சென்றான்.

அவன் பேச பேச மனதை யாரோ கிழிப்பதை போல் உணர்ந்த சனா அவன் கடைசியாக சொல்லி விட்டுச்சென்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க அறைக்கதவை பூட்டிக்கொண்டு தன்னால் முடிந்த அளவு கதறிக் கதறி அழுதாள். "ஏன் என்னால என் நிகியை மன்னிக்க முடியல? ஏன் நா இவ்ளோ செல்பிஷ்ஷா இருக்கேன்" என்று பலவாறு யோசனைக்கு மத்தியில் தன்னால் முடியுமான அளவு அழுதாள்.

"நிகில்"
என்ற நவாவின் குரலை கேட்டு வாசலை தாண்டி வெளியே சென்று கொண்டிருந்த நிகில் அப்படியே நின்றான்.

"என்னடா? அப்டியே கிளம்பிட்ட?
சனா கூட பேசுனியா...?"
என்று கேட்டு, நிகிலின் முகத்தை கூர்ந்து நோக்கினான் நவா. அவனது பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு.

நிகில் அமைதியாக இருக்க,
"நா தான் பேசுறேன்னு சொன்னேன்லடா.
சரி நீ இப்போ எங்க கிளம்பிட்ட" -நவா

பெருமூச்சொன்றை வெளியிட்ட நிகில்,
"நீ இனிமே எதுவும் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து பேசாத நவா. நா எல்லாம் பேசிட்டேன்.
ஐ மீன் பேசி முடிச்சிட்டேன்.
அவளுக்கு பிடிச்ச மாதிரியான லைஃப் அவளுக்கு கண்டிப்பா கிடைக்கும்.
உன்னால முடிஞ்சா அவளுக்கு புடிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிவை."

அவனது பேச்சில் அதிர்ந்தவன்,

"ஆர் யூ மேட் நிகில்...
உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?
குடும்பமே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெக்க பார்த்துட்டு இருக்காங்க. நீ என்னானா அவளுக்கு வேற வாழ்க்கைய பார்த்து கொடுக்க சொல்ற.
பெரிய தியாகியாடா நீ?

சனாதான் உன் நிலமைய புரிஞ்சிக்காம இருக்கானா நீயும் ஏன்டா இப்டி இருக்க?

புரிஞ்சிக்க நிகில் அவள் கோபம் கொஞ்ச நாள்ல குறைஞ்சிரும்." -நவா

விரக்தி கலந்த புன்னகை ஒன்றை உதிர்த்த நிகில்.

"நீ இதையே தான் வன் இயரா சொல்லிட்டிருக்க நவா.

நா ஆசப்படுற படி என் வாழ்க்கையில எதுவுமே நடக்காதுன்னு கடவுள் எழுதி வெச்சிருக்குறப்போ இனியும் அவளோட காலத்தையும் எதுக்கு வேஸ்ட் பண்ணணும்.

அதான் எதுவுமே வேணாம்னு போறேன் டா.
இனிமேலாவது எனக்கு பிடிச்ச லைஃப நா அமைச்சிக்கனும்.
ஒன்னே ஒன்ன தவிர.

கல்யாணம்.

இத தவிர எனக்கு பிடிச்ச வாழ்க்கையை நா இனி வாழனும்னு ஆசப்படுறேன் டா.
அதான் கெளம்பிட்டேன்.
பை டா"
என்றவன் கலங்கிய கண்களோடு அவனுக்கு விடை கொடுத்து, வெளியேறப்போக அவனை தடுத்து நிறுத்தினான் நவா,

"நீ ஆயிரம் தான் சொன்னாலும் இந்த ஜென்மத்துல உனக்கும் சனாக்கும் தான் கல்யாணம்.
அவ மாறுவா.
அவளோட பிடிவாதம் இன்னும் பல நாளுக்கு நிலைக்காது.
நீ போ. வரும் போது கல்யாண மாப்பிள்ளையா தான் வருவ"
என்று சிரித்துக்கொண்டே சொல்ல.

"ஹா ஹா.
அப்போ என்னோட சேர்த்து அவளையும் பிரம்மச்சாரியாக்க போறியாக்கும்.
நீ அவளுக்கு ஏற்ற மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணி வெக்குற.
அவ கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் நா இந்தியா வர்றதா இருந்தா வருவேனே தவிர, அதுக்கு மொத கனவுல கூட வரமாட்டேன்.
பை"
என்ற நிகில் இப்பொழுது நவாவுக்கு பதில் அளிக்க கூட அவகாசம் அளிக்காமல் காரில் ஏறி தனது கனடாவுக்கான பயணத்திற்காக விமான நிலையத்தை நோக்கி பறந்தான்.

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த நவாவின் தலை உண்மையிலேயே வலிக்கத்தொடங்கியது. இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகியிருந்த இந்த சின்ன பிரச்சினையை இந்தளவு பெரிதாக்கிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதே அவனுக்கு கடும் கோபம் வந்தது.

ஒருவர் பக்க நியாயத்தை இன்னொருவர் கண்டுகொள்ளாமையால் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமையில் எவ்வாறானதொரு முடிவு எடுப்பது என்று அவனுக்கு தெரியவே இல்லை.

நிகில் சொல்வதுபோல் சனாவுக்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைக்க அவன் மனம் விரும்பாத அதே வேளை இதை சனா ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதும் அவன் அறிந்த விடயமே.

இவ்வாறு யோசனையில் இருந்தவனின் தோள்களில் விழுந்த கைக்கு சொந்தக்காரரான தன் தாயை கண்டுகொண்டவன் யோசனையோடே அவர் புறம் திரும்பினான்.

"அம்மா என்னமா நடக்குது?

சின்ன குழந்தைங்க மாதிரி ரெண்டும் பகைச்சிக்கிட்டு நிக்குதுங்க.
அவன் அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வெக்க சொல்றான்.
சனா என்னன்னா பதிலே சொல்லாம வாய மூடிக்கிட்டு இருக்கா.
எனக்கு என்ன செய்றதுன்னே புரியல மா."
இயலாமையுடன் கூறினான் நவா.

"விடுடா கண்ணா.
அண்ணியும் இப்போ அதைத்தான் கால் செஞ்சு புலம்பிட்டு இருக்காங்க.
நிகில் கொஞ்ச நாளேக்கி அவள கண்டெக்ட் பண்ணாம இருந்தா தான் சனாவுக்கு அவனோட பிரிவு வலி விளங்கும்.
ஸோ நாம அவங்க ரெண்டு பேரோட வழியிலேயே போய் அவங்கள பிடிக்கலாம்.
நீ  இப்போ உன்ன பாரு.
எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?" -நிகிழினி

"நா அப்போவே சொன்னது தான் மா. சனாவோட மேரேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான்."
உறுதியாக கூறிய மகனை இந்த முறை நிகிழினி விடுவதாயில்லை.

"இல்ல கண்ணா.
அது முடியாது.
உன் கல்யாணம் தான் மொதல்ல நடக்கணும். நீ எதுவும் எனக்கு சொல்ல வேணாம். மீதிய நானே பார்த்துக்குறேன்."
என்றவர் அவ்விடத்தை விட்டும் மறைந்திருந்தார்.

அன்றைய மதிய நேரத்தில் "என். ஆர் குரூப் ஒப் கம்பெனி" இன் பெங்களூர் கிளையின் நிர்வாக இயக்குநர் அறையில் தனது லெப்டோப்பில் எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த நவநீதன் அதை மூடிவிட்டு தன் இருக்கையிலே தலையை பின்னோக்கி சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.

மூடிய கண்களுக்கு இடையில் வந்து போனால் அவள். அவனையும் மீறி உதட்டோரத்தில் முளைத்த புன்னகையை விழுங்கிக்கொண்டவன், சடாரென்று நேராக அமர்ந்து கொண்டு தன் போனில் இருக்கும் அவளது போட்டோவை எடுத்து,
"என் செல்ல ராட்சஷிடீ நீ. என்னைய என்னா பாடு படுத்துற. எத்துனை வருஷமா உன்ன பார்க்காம உன்கூட பேசாம எந்த காதலனுக்கு இப்டி ஒரு கொடுமை இந்த உலகத்துளையே நடக்காது பேபி.
ஆனாலும் இதுலையும் எனக்கு ஒரு சந்தோஷம் இருக்கு தெரியுமா. எனக்கு நீ நீயா வேணும். நீயாவே போட்டுட்டிருக்கிற முகமூடியை கழட்டி என் கிட்ட நீ கூடிய சீக்கிரம் வருவ பேபி. அந்த நாளுக்காக தான் நா இத்துன வருஷமா காத்துட்டு இருக்கேன்.
அப்புறம் இருக்குடி உனக்கு"
என்று அவனது காதல் தேவதையோடு மனதிலே பேசிக்கொண்டிருக்கும் போது அவனது மேசை மீதிருந்த தொலைபேசி சிணுங்க ஆரம்பித்தது.

அதை எடுத்து காதில் வைத்தவன் மறுமுனை சொன்ன தகவலை கேட்டு வேகமாக லேப்டாப்பை திறந்து வரவேற்பில் உள்ள சிசிடிவி போஸ்டை திறந்து பார்க்க அங்கு அவனது இரண்டாவது சித்தப்பாவின் மனைவியும் அவரது மகளும் அமர்ந்திருந்தனர்.

அந்த மகள் தான் சனாவின் முதல் உற்ற தோழி. அவளுக்கு இன்று பல நண்பர்கள் இருந்தாலும் சனாவின் நட்பில் எப்போதும் இவளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும். இவளை சந்திக்க தான் அன்று சனாவும் நிஷ்மிதாவும் சென்று நவாவிடம் மாட்டிக்கொண்டனர்.

சித்தப்பாவின் மகளை கண்டதும் நவாவின் வாய் "அம்மு" என்று தானாக உச்சரித்தது. சனா மீது எவ்வாறு பாசமாக இருக்கிறானோ அதே சக வயதை உடைய அம்முவின் மீதும் அளவுகடந்த அன்புடன் பழகியவன் தான் நவநீதன். தந்தை பக்க ஒட்டுமொத்த குடும்பத்தினதும் முதல் வாரிசு நவா என்பதால் அவன் மீது அனைவருக்கும் பாசம். அதே போல் இவனும் அனைவர் மீதும் அன்பு கொண்டவன் தான்.

தந்தையின் மரணத்தின் பின் ஏற்பட்ட இன்னோரன்ன விடயங்களால் அழகான குடும்பமாக இருந்த இவர்களின் குடும்ப அமைப்பு சிதைந்தது.

யோசனைக்கு மத்தியில் வரவேற்பாளருக்கு அழைத்து அவர்களை தன் அறைக்கு அனுப்பும் படி கூறியவன் அவர்களது வருகைக்காக காத்திருந்தான்.

இவர்களது சந்திப்பு இந்த இருவீட்டாரின் ஐந்து வருட மனக்கசப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியாக நிச்சியமாக அமையும்.

இதன் மூலம் சனாவின் பல நாள் கனவுகளில் ஒன்று நனவாகப்போகின்றது.

வெங்கட் சாரின் அறையில் இருந்து கோப்பொன்றுடன் வெளியே வந்த நிருவின் கண்களில் வித்யாவுடன் சேர்ந்து வினீத்தோடு சகஜமாக சிரித்துப்பேசிக் கொண்டிருக்கும் ரிதூ சிக்க அவளது கண்கள் குளிர்ந்தது. புன்னகையோடே அவர்களை நெருங்கியவள்,

"என்ன வினீத்? இன்னேக்கி சிரிப்பு பலமா இருக்கு.
வித்யா ஏதாவது மொக்க ஜோக் சொன்னாளா?"

"ஹஹ்ஹா வித்யா இல்ல ரிதூ தான் சொன்னா.
ஆனா ஜோக் கெடையாது.
உன்ன தான் ஏதோ சொன்னாள்.
அவகிட்டயே நீ கேட்டுக்கோ எனக்கொரு சின்ன ஓர்க் இருக்கு."
என்று கூறியவன் லாவகமாக அவ்விடத்தை விட்டும் சிரித்தபடியே நகர்ந்திருந்தான்.

அவன் போனதும் தன்னிடம் "என்ன சொன்ன?" என்று நிரு கேட்பாள் என்று ரிதூ எதிர்பார்த்திருக்க சிரித்தபடியே ரிதூவின் கன்னத்தில் முத்தமிட்டாள் நிரு.

தன் கன்னத்தை சட்டென்று துடைத்துக்கொண்ட ரிதூ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
"இப்போ எதுக்குடி என்ன நீ கிஸ் பண்ண?
பாவி யாராவது பார்த்திருந்தா என்ன நெனச்சிக்குவாங்க?"
என்று முறைத்தாள்.

"ஹஹ்ஹா."
என்று வாய் விட்டு சிரித்தவள், வித்யாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு,
"யாரும் எதுவும் நெனச்சிக்க மாட்டாங்க டார்லிங்.
உனக்கு உன் பிரென்ட் கிஸ் பண்ணிட்டான்னு தான் நெனச்சிக்குவாங்க."

உதட்டை சுழித்து மீண்டும் அவளை முறைத்தாள் ரிதூ.

"ஹஹ்ஹா.
இதுக்கு தான் டார்லிங். நீ இப்டி எல்லாம் பண்றியேன்னு தான் உனக்கு கிஸ் பண்ணேன்.
நீ மாறிட்ட இல்ல அதான். எனக்கு வந்த சந்தோஷத்துல உன்ன கிஸ் பண்ணிட்டேன்.
வேணும்னா இன்னொன்னு எடுத்துக்கிறியா"
என்று கூறி கண் சிமிட்டினாள் நிரு.

"ஏய் இரு இரு உன்ன அப்புறம் கவனிச்சிக்குறன்." என்று அவளையும் அவளோடு சிரித்துக்கொண்டிருக்கும் வித்யாவையும் பார்த்து முறைத்தவள்,
" நா போறேன்"
என்று வேகமாக அவ்விடத்தை விட்டும் புன்சிரிப்புடன் விலகியிருந்தாள். மனநிறைவாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தனர் நிருஷனாவும் வித்யாவும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro