🌚11🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இயற்கையை ரசிப்பதே பலபோது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாக அமையும். கடவுள் இயற்கை வளத்தை அவ்வாறு தான் அமைத்துள்ளான்.

ஆனால் இன்று மனிதனின் பல்வேறுபட்ட மனிதாபிமானம் அற்ற சுயநலமான நடத்தைகள் காரணமாக இந்த இயற்கை என்ற கடவுளின் வரமே மனிதனுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இன்று அமைந்து காணப்படுகின்றது.

ஞாயிறு அன்று மதியம் கடந்து மாலை நெருங்கும் வேளை அது. அந்த கடற்கரை மணலில் அமர்ந்த படி தோழிகள் ஐவரும் கடலலைகளை ரசித்துக்கொண்டிருந்தனர்.

ஐவரின் பார்வையும் ஒரே இடமான வானை கடல் முத்தமிடும் இடத்தில் பதிந்திருக்க எண்ணங்களோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருந்தது.

அஞ்சலியின் எண்ணமெல்லாம் இப்போதைக்கு தன் அண்ணாவின் மேல் இருந்தது. அவளது ஆசை எல்லாம் தன் அண்ணனுக்கும் நேஹாவுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான்.

பல வருடங்களுக்கு முன் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது தான். ஆனால் நேஹா தான், தான் படிக்க வேண்டும் என்ற காரணத்தை காட்டி கல்யாணத்தை அன்று நிறுத்தினாள்.

ஆனால் அதற்காக அவள் வருத்தப்படாத நாளே இல்லை எனலாம். அன்றைக்கு பிறகு அவள் அஞ்சலியின் அண்ணாவைக் காணவே இல்லை என்பதை விடவும் அவன் நேஹாவின் பார்வை வட்டத்துக்குள் தான் விழாமல் பார்த்துக்கொண்டான் என்றே கூறலாம்.

இன்று நேஹாவும் அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை. அவனும் இவளை இங்கு எதிர்பார்க்கவில்லை. அஞ்சலி நேஹா தன்னோடு தான் வேலை பார்க்கிறாள் என்பதை அவளது வீட்டவர்கள் யாரிடமும் இதுவரை கூறியிருக்கவுமில்லை.

அஞ்சலியும் நேஹாவும் சமவயதை உடையவர்கள். இருவரும் உற்ற தோழிகளும் கூட. அஞ்சலிக்கு நேஹாவுடன் அவள் தன் அண்ணனை அன்று திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொன்ன கோபம் தான்.

மற்றைய விதத்தில் அவர்களுக்கு இடையில் எந்த பூசல்களும் கிடையாது. இப்பொழுது நேஹா பக்கத்தில எல்லாம் சரியாகி இருந்தாலும் அன்று நின்ற கல்யாணத்தை எப்படி மீண்டும் நடத்த தான் கோருவது என்பதே அவள் பக்க சிக்கலாக உள்ளது.

தன் யோசனையில் உழன்று கொண்டிருந்தவள் அஞ்சலியை திரும்பி பார்க்க அதே நேரம் அஞ்சலியும் தன் யோசனையில் இருந்து மீண்டு நேஹாவைப் பார்த்தாள். நேஹா அவளைப் பார்ப்பதை உணர்ந்தவள் சட்டென்று வேறு பக்கம் திரும்பிக்கொள்ள அவளுக்கு மிக அருகில் போய் அமர்ந்து கொண்ட நேஹா அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொள்ள அதை வெடுக்கென்று இழுத்துக்கொண்டாள் அஞ்சலி.

"ஏன் நா உன் கைய பிடிக்க கூடாதாக்கும்" -நேஹா

அவளை திரும்பி முறைத்து வைத்த அஞ்சலி,
"நீ யாரு என் கைய பிடிக்க?
நீ எதுக்கு பிடிக்கணும்?"

"ஹா ஹா. என் மாமன் கைய தான் இன்னும் பிடிக்க முடியல. அதான் நாத்தனார் கையயாவது பிடிச்சுக்கலாம்னு பார்த்தேன்." -நேஹா

"மாமா உன் கைய பிடிக்க வந்தப்போ நீ தானே தட்டிவிட்ட.
வேற யாரும் உன்ன பிடிக்க வேணாம்னு பிடிச்சு வெச்சுக்கலையே."
என்ற அஞ்சலி நேஹாவின் முகத்தை கூர்ந்தாள்.

"ஆமா... எல்லாம் என் தப்புதான். ஒத்துக்குறேன். அதுக்காக என் கூட பேசாமயே, என்ன பார்க்காமயே எப்டி அர்ஜுனால முடிஞ்சுது அஞ்சலி?
கல்யாணம் வேணாம்னு அப்போ நா சொன்னது கல்யாணத்துக்கு அப்புறம் அவனுக்காகவே எல்லாமுமாக நா இருக்கனுங்குறதுக்காக தான்.
எங்க அம்மா அப்பால இருந்து அத யாருமே இன்னேக்கி வர புடிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்க."
என்றவளின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

அவளது கண்களில் கண்ணீரைக் கண்ட அஞ்சலி சட்டென்று அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.
"சாரிடி நா வேற நீ என் அண்ணன கட்டிக்க புடிக்காம தான் அப்டி சொல்லிட்டியோன்னு யோசிச்சேனே தவிர. இப்டி யோசிக்கவே இல்ல." -அஞ்சலி

"எனக்கு அர்ஜுன சின்ன வயசுல இருந்தே பிடிக்கும் தெரியுமா. என்ன பத்தி நல்லா தெரிஞ்ச நீயே இப்டி யோசிச்சு இருக்கன்னா மத்தவங்க எப்படியெல்லாம் யோசிச்சு இருப்பாங்க"
என்றவளின் குரல் கரகரப்புக்கு மத்தியில் தான் வெளிப்பட்டது.

"விடு நேஹா. இவ்வளவும் நடக்கணும்னு விதியில் இருக்கும் போது நாம என்ன பண்ண முடியும். நா அண்ணா கூட பேசுறன். கூடிய சீக்கிரம் நீ விளக்கேத்த நம்ம வீட்டுக்கு வருவ"
என்றவள் நேஹாவின் தோளை அழுத்திக்கொடுத்தாள்.

"வேணாம் அஞ்சலி.
நானே அர்ஜுன் கூட பேசுறேன்.
நீ அவன் நம்பர் கொடு"
என்றவள் அர்ஜுனின் நம்பரை ஆவலோடு வாங்கி தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டாள்.

"இருந்தாலும் அவனுக்கு ரொம்ப தான் கொழுப்புடி. ஆள் தான் என் முன்னாடி வாரது இல்லன்னா நம்பரை கூடவா சேஞ்ச் பண்ணனும்.
எல்லாத்துக்கும் சேர்த்து கல்யாணத்துத்துக்கு அப்புறம் இருக்கு அவனுக்கு"
என்ற நேஹா அவளையும் மீறி சிரிக்க,
"பாவம் என் பாசமலர்"
என்று கூறி அஞ்சலியும் அவளுடன் இணைந்து கொண்டாள்.

எப்படியோ மிக விரைவில் நேஹா, அஞ்சலியின் அண்ணியாகப் போகிறாள் என்பது மட்டும் உண்மையாகும்.

பல காதலர்கள் காதலர்களாக மாறுவதற்கு அவர்கள் காரணமாகின்றனரோ இல்லையோ நிச்சியாமாக நண்பர்களின் பங்களிப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது மட்டும் உண்மையிலும் தெட்டத்தெளிவான உண்மையாகும்.

அவ்வாறு தான் இன்று வித்யாவின் மனதில் வினீத் மீதான காதல் உருவாக ஏனைய நான்கு தோழிகளும் காரணமாகி விட்டிருக்கின்றனர். வித்யாவிற்கு வினீத் மீதான தனது காதல் உறுதியாக இருந்தாலும் அவனது பேச்சிலோ நடத்தையில் இருந்தோ இவள் மீதான அவனது அபிப்பிராயம் என்னவென்று எதனையுமே அவளால் கண்டு கொள்ளவே முடியவில்லை.

இத்தனைக்கும் வித்யா அவனது அத்தை பெண் தான் என்பதை கூட அவன் அறிந்து வைத்திருக்கவுமில்லை.
என்றும் வெங்கட் சாரோடு கோபப்படாத வித்யா இந்த விடயத்தில் மட்டும் அவருடன் கோபத்துடன் இருப்பது அவளது மனசாட்ச்சிக்கு மட்டும் தெரிந்த உண்மையாகும். நிரு பல தடவைகள் இதை கூற வாயெடுத்தும் லாவகமாக அதை தடுத்திருந்தாள் வித்யா. எப்பொழுது இவனிடம் நான் என் காதலை சொல்லி எப்பொழுது இவனை கரம்பிடிப்பது என்பதே வித்யாவின் இப்பொழுதைக்கான கவலையாகும்.

எந்த காதல் காவியம் தான் சிரமம் இல்லாமல் தீட்டப்பட்டிருக்கிறது. காதலில் மட்டும் தான் தவிப்பிலும் ஒரு களிப்பு இருக்கிறது அல்லவா. வித்யாவின் காதலனை நாம் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். பாவம் இவளிடம் சிக்கி வினீத் என்ன பாடுபடப்போகிறானோ!

நிருவின் முகத்தை பார்க்கும் போது அவளது முகபாவனையில் இருந்து அவளது சிந்தனை எதில் ஆழ்ந்துள்ளது என்பதை கண்டுகொள்ள முடியவில்லை. அவள் பொதுவாகவே தனது உணர்ச்சிகளை மறைக்க பாடுபடவே மாட்டாள். அந்த திறமை இயல்பிலேயே அவளிடம் ஒட்டிக்கொண்டுள்ளது. பல பேரிடம் என்றும் ஒட்டாத இந்த திறன் நிருவிடம் மேலதிகமாகவே இருக்கிறது என்றே கூறலாம்.

நிருவுடன் ஒட்டினாற் போல் அமர்ந்திருந்தாள் நம் நாயகி ரிதுர்ஷிகா. அவளது முதல் ஆருயிர் தோழி என்றால் அது நிரு தான். அவள் மூலமாகத் தான் தான் யார் என்பதையே இன்று உணர்ந்திருக்கிறாள் ரிதூ. அவள் மூலமாக தான் இன்று பல நட்பு வட்டாரங்களையும் பெற்றிருக்கிறாள்.

தனது இறந்த காலத்தை நினைத்து தானா இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறேன் என்று அவளே யோசிக்கும் அளவுக்கு அவள் மாறியிருக்கிறாள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் கடவுள் என்றால் அதற்கடுத்த பங்கு விஜய்யுடன் சேர்ந்து நிருவையே சேரும்.

தன்னை யார் என்று எவள் உணர்ச்செய்தாளோ அவள் இன்று காலையில் கேட்ட கேள்வியே ரிதூவின் சிந்தனை ஓட்டத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

"இத்தனைநாள் எனக்கே எனக்காக இருந்த ஆண்துணை என்றால் அது என் சித்தப்பா மட்டும் தான்.
அதுக்கப்புறம் இப்போ புதிதா தான் வெங்கட் சாரோட இயல்பா பேசுறேன். அதேபோல கொஞ்ச நாளாக தான் வினீத் கூட கொஞ்சம் பேசுறேன்.
இதையெல்லாம் தாண்டி,
எனக்கே எனக்கென ஒரு ஆண் துணையா?
அதிலும் அனைத்தையும் அவர்கூட பங்கு போடணும்.
அவர் சந்தோஷப்படுற மாதிரி தான் நடந்து கொள்ளனும்.
அவருக்கு எல்லாமுமாக நான். எனக்கு எல்லாமுமாக அவர்.
அவர் அப்படி எனக்கு எல்லாமுமாக இருப்பாரா?
என் சித்தப்பா போலயே என்னோட பாசமா இருப்பாறா?
இல்லாவிட்டால்... இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் போது நடந்த மாதிரி எனக்கு... எ..ன..க்..கு.. என்று ரிதூ யோசிக்கும் போதே மூச்சு முட்டுவது போல் உணர்ந்தாள்.

சித்தப்பா எனக்கு தந்த காலக்கெடு முடிய இன்னும் இரண்டே இரண்டு மாதம் தான் இருக்கு...
என்ன பண்ணலாம்? "
நிருஷனா இன்றைக்கு காலையிலே மிகவும் புத்திசாலித்தனமாக தெளிவான முறையில் ரிதூவை குழப்பிவிட்டிருக்க உண்மையிலேயே சிறிது குழம்பித்தான் போயிருந்தாள் அவள்.

உண்மையில் ரிதூ அவளை அவளாகவே உணரத்தொடங்கி கொஞ்ச நாள் தான் ஆகின்றது. அவளது பழைய குழப்பங்கள் ஒருவாறாக குறைந்து தான் போயிருக்கின்றது. முற்றாக குறைந்து போயிருக்கிறது என்றும் கூறலாம். அவளாக அவளுக்கு அவளை சுற்றி போட்டுக்கொண்டிருந்த வட்டத்துக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியிருக்கிறாள்.

பலநாள் அவள் யோசித்த கேள்விக்கு பதிலை அவளாகவே கண்டுகொள்ள நிருவின் உந்துதலோடு மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே அவளுள் இந்த மாற்றம். ரிதூ அவளது இன்றைய நண்பிகளை காணும் போதெல்லாம் அன்று யோசித்தது தான் "ஏன் என்னால் மட்டும் இவர்களைக் போல் இயல்பாக நடந்து கொள்ள முடியவில்லை?" என்பது.

அந்த கேள்விக்கு அவளுக்கு பல பதில்கள் கிடைத்தாலும் அவளால் உணர முடிந்தது தான் முயற்சி பண்ணாமல் எதுவும் தன்னில் மாறப்போவதில்லை என்பது தான். இதைக் கூட அவளுக்கு உணரச்செய்தவள் நிரு தான். இன்று எவ்வாறோ ரிதூ மாறிக்கொண்டிருக்கிறாள். மாறியே விட்டாள்.

ஓவ்வொருவரும் தங்கள் தங்கள் யோசனையில் உழன்றுகொண்டிருக்க, யோசனையில் உழன்று கொண்டிருப்பவர்களை கலைப்பதற்காகவே அலறியது நிருவின் கைப்பேசி.

கைப்பேசியை எடுத்து திரையைப் பார்த்தவள்,
"அம்மா ஏன் இந்த டைம்ல கூப்பிடுறாங்க"
என்று யோசனைக்கு மத்தியிலே போனை ஸ்வைப் செய்து காதில் வைத்து, எழுந்து கொஞ்சம் தள்ளி சென்று பேசினாள்.

ஏனைய நால்வரும் இவ்வளவு நேரம் எதுவும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாததை எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள.

"நாம இப்டி உட்கார்ந்து கடல வெறிக்க தான் இங்க வந்தோமா?
இதுக்கு பேசாம வீட்டில இருந்து எனக்கு தூங்கியே இருக்கலாம்" -வித்யா

"நீ தூங்குறதுளையே இரு ராசாத்தி.
கடல வெறிக்குறதுல கூட ஒரு இன்பம் இருக்கு தெரியுமா?
இந்த சூடான கடல் காற்று வீசும்போது..."
பேசப்போன நேஹாவை நிறுத்தி

"வீசும் போது...?"
என்று வேண்டும் என்றே இடையில் புகுந்து சிரித்தபடி கேட்டனர் ரிதூவும் அஞ்சலியும் .

"போங்கடி"
என்று சிரித்தாள் நேஹா.

"கவிதை கவிதை"
என்று சிரித்தாள் ரிதூ.

"என்ன நேஹாவுக்கும் இந்த மாதிரி நேரமொன்னுல அவ ஆளுக்கூட வோக்கிங் போகணும்னு ஆசையாமா?"
கேட்டபடியே வந்தமர்ந்தாள் நிரு.

"அதைத்தான் சொல்லாமலே நிறுத்திட்டாள் நிரு.
எனக்கு ஒரே கவலையா இருக்கு தெரியுமா. விட்டா கவிதையே சொல்லிருப்பாளோ என்னமோ" என்று போலியாக கவலைப் பட்டுக்கொண்டாள் ரிதூ.

"உனக்கு!" என்று ரிதூவின் முதுகில் இரண்டு போடு போட்டாள் நேஹா. மேலும் அவள் அடிக்க போக அவளிடமிருந்து தப்பிக்கிறேன் என்று கடலை நோக்கி ஓடியவள் ஒரு ஆடவனின் நெஞ்சுக்கூட்டில் மோதி விழப்போக "ஹேய் பார்த்து" என்று கத்தியவன் அவள் கையைப் பிடித்து நேராக நிறுத்தினான்.

அவளது கையை துப்பட்டா மறைத்திருக்க அவனது தொடுகையை அவள் சரியாக உணராவிட்டாலும் "தன்னை யாரோ விழாமல் காப்பாற்றி இருக்கிறார். நன்றி சொல்ல வேண்டுமே. பார்த்து வரமாட்டியா என்று திட்டு விழுமோ" என்று இவள் கண்களை மூடி ஜெட் வேகத்தில் சிந்தித்து, மெதுவாக கண்களை திறக்கும் போதே தன்னை பிடித்து நிறுத்தியவர் நில்லாமல் போகிறார் என்று உணர்ந்தவள் சட்டென்று.

"ஹலோ சார்... தேங்க்ஸ்"
என்றாள்.

"நோ மென்ஷன்"
என்று புன்னகைக்கு மத்தியில் அவன் கூறும்போது தான் அவனது முகத்தை பார்த்தாள் ரிதூ.

நெற்றியின் அரைவாசியை அவன் அணிந்திருந்த கருப்புநிற தொப்பி மறைத்திருக்க முகத்தின் மீதிப் பகுதியின் மூன்றில் ஒரு பகுதியை அவனது கருப்பு நிற பெரிய கண்ணாடி மறைத்திருந்தது. பார்க்க அழகாகத்தான் இருந்தான். எல்லாம் ஒரு வினாடி தான்.

"இந்த முகம் எங்கோ எப்பொழுதோ பார்த்த முகம் போல இருக்கே"
என்று ரிதூவின் யோசனை மீண்டும் ஜெட் வேகத்தில் பறந்தது.

ஆனால் அவளது பாழாப்போன மண்டையில் தான் அவன் யார்? எப்போது பார்த்தேன்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை.

ரிதூ ஒரு ஆடவனுடன் மோதும் போதே இவளை துரத்திக்கொண்டு வந்த நேஹா திட்டு விழுமோ என்ற பயத்தில் இவளிடம் வருவதற்கு துணைக்கு நிருவை அழைத்திருந்தாள். நேஹாவை அவ்விடத்திலேயே நிறுத்திய நிரு இவர்களை நோக்கி வந்திருந்தாள்.

இவர்களை நோக்கி வேகமாக வந்தவள்,
"சாரி சார். நீங்க வர்றத கவனிக்காம வந்து இடிச்சிட்டா"
நிருவின் குரலில் சற்று பதட்டம் கலந்து தான் இருந்தது.

அவளது பக்கம் திரும்பியவன், மன்னிப்பை தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டவாறே அழகாக பற்களை காட்டி சிரித்து வைத்து, ரிதூவை கண்களால் காட்டி,
"உங்க பிரெண்டா சிஸ்டர்?" என்று கேட்டான்.

வாயால் பதில் சொல்லாமல் மேலும் கீழும் தலையை ஆட்டிவைத்தாள் நிரு.
"ஹாஹ்ஹா" என்று சிரித்து வைத்தவனை இப்பொழுது நிருவும் ரிதூவுமே சற்றே வியப்பாக பார்த்தனர்.. "நா அவங்கள எதுவுமே திட்டல சிஸ்டர்.
வேணும்னா கேட்டே பாருங்க"
என்றவன் மீண்டும் அவனது அடையாளப் புன்னகையை இவர்கள் இருவரிடமும் வீசி விட்டு இருவரையும் கடந்து சென்றிருந்தான்.

அந்த ஆடவன் செல்லும் திசையையே இருவரும் நோக்கியிருக்க,
"ரிதூ"
மெதுவாக அழைத்தாள் நிரு.

"மம்ம்ம்ம்"
சொன்னாள் என்பதை விட முனங்கினாள் என்பதே பொருத்தம்.

"அந்த அண்ணன எங்கயாவது நீ பாத்திருக்கியா?" -நிரு

"என்னது அண்ணாவா?" -ரிதூ

"ம்ம்ம் யெஸ். உனக்கு இல்ல எனக்கு.
அவன் தானே என்ன சிஸ்டர் சொன்னாரு.
சரி அதவிடு நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
நீ இதுக்கு முன்னாடி அவர எங்கயாவது பார்த்திருக்கியா?" -நிரு

"முன்னாடியும் பார்த்ததில்ல பின்னாடியும் பார்த்ததில்ல"
கேலியாக சொன்ன ரிதூவின் காதை வலிக்காமல் திருகினாள் நிரு.

"ஹீ ஹீ.
எனக்கும் சரியா தெரியலடி. ஆனா அடிக்கடி பார்த்த முகம் போல தோணுது."
என்றவள் உதட்டை அழகாக வளைத்தாள்.

"ஓஹோ.
அப்டின்னா ஒரு வேள இந்த ஆள் தான் அந்தாளா இருப்பாரோ?" -நிரு

விழித்தவள்,
"எந்தாள்?"
குழப்பமாக கேட்டாள் ரிதூ.

"மேபீ, உன் சோஃள் மேட்டா இருப்பாரோ" -நிரு

"என்னது?
உனக்கென்ன லூசா.
நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் இன்னேக்கி மோர்னிங்க்ல இருந்து நீ என்ன குழப்பிக்கிட்டே தான் இருக்க.
வேணும்னே தானே இப்டி எல்லாம் செய்ற?"
கண்களை உருட்டிக்கேட்டாள் ரிதூ.

"ஹேய் இல்லடி.
அந்த அண்ணனும் உன்ன நல்லா தெரிஞ்சவர் போல தான் நடந்துகிட்டாரு.
நீயும் அவர் முகம் தெரிஞ்ச முகம் போலன்னு சொல்ற.
அத வெச்சு பார்த்தா..."
என்று சொன்ன நிரு ரிதூவைப் பார்த்து சிரித்து வைத்தாள்.

அவளை முறைத்துப்பார்த்தவள் ஏதோ யோசனைக்கு செல்ல,
சிறிது நேரம் கழித்து அந்த மௌனத்தை கலைத்தாள் நிரு.
"என்ன மேடம் உடனே யோசனைக்கு போய்ட்ட?
என்ன நா சொல்றது சரின்னு புரியதா?"
ஒற்றை புருவம் உயர்த்தி கேலியாகக் கேட்டாள் நிரு.

அவளை மீண்டும் முறைத்தவள்,
"நா ஒன்னும் அதப்பத்தி யோசிக்கல"

"அப்போ" -நிரு

"உன்ன எப்டி போட்டுத்தள்ளலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்." -ரிதூ

"அடிப்பாவி என்னயா?" -நிரு

"இல்லாட்டி உங்க தாத்தாவயா?" -ரிதூ

"ஹஹ்ஹா.
இதுக்கெல்லாம் இருக்க கூடாதுன்னு தான் அவர் எப்போவோ போய் சேர்ந்துட்டாரு"- நிரு

"பொலச்சிக்கிட்டாரு" -ரிதூ

"நீ ஒன்னு செய்.
என் அண்ணா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன போட்டுரு." -நிரு

"ம்ம் ஓகே"
என்று சிரித்தபடி அவள் தோளோடு தோள் இடிக்க நிருவும் வாய்விட்டு சிரித்தாள்.

இப்பொழுது இவர்கள் இருவருக்கும் அருகிலும் ஏனைய மூவரும் வந்திருந்தனர்.
"எவ்ளோ நேரம்டி போறவரோட பின் பக்கத்தையே பார்த்துட்டு இருக்க போறீங்க?
நா வேணா அவரை கூப்பிடட்டா?"
வார்த்தையில் கேலி மின்ன கேட்டாள் வித்யா.

அவளை முறைத்து வைத்த நிரு.
"நீ வேணா அந்த பிரதர பார்த்துக்கோ. நா போறேன்."
என்று நகரப்போனவளை கைப்பிடித்து நிறுத்தினாள் வித்யா.

"உனக்கு பிரதர்னா எனக்கும் பிரதர் தான். ஸோ எதுக்கு அவரை பார்த்து நாம டைம் வேஸ்ட் பண்ணனும். நாம சேர்ந்தே போகலாம்."
சிரிப்பினூடே கூற அனைவரும் சேர்ந்தே சிரித்தனர்.

"அது சரி. நீ நாளைக்கு ஆபீஸ் வாரியா நிரு?" -நேஹா

"ம்ம்ம் யெஸ். வரணும்.
ஏற்கனவே பீவர்னு சொல்லி த்ரீ டேஸ் லீவ் போட்டுட்டேன்.
இன்னும் டூ மந்த்ஸ்ல அண்ணாக்கு கல்யாணம் வேற இருக்கு அதுக்கு வேறு லீவ் எடுக்கணும் இல்ல. ஸோ கண்டிப்பா வந்து தான் ஆகணும்." -நிரு

"என்னது? உன் அண்ணாக்கு கல்யாணமா?"
வாயைப் பிளந்தபிடி கேட்டாள் அஞ்சலி.

"அதுக்கு எதுக்குடி உன் திருவாய இந்தளவு திறக்கிற?" -வித்யா

"இல்ல நிருதானே சொன்னாள் அவ அண்ணாக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காதுன்னு. அதான்"- அஞ்சலி

"ஹஹ்ஹா. அவன் தேடியவ அவன் தேடிய மாதிரியே கெடச்சிருக்கு. ஸோ கல்யாணம்." - நிரு

"நீதானே சொன்ன உன் அண்ணா அமைதியான பொண்ணா தேடுறாரு. இந்த காலத்துல எங்க கிடைக்க போகுதுன்னு." -அஞ்சலி

"அப்போ சொன்னேன் தான். இப்போ சிக்கிருக்கு. ஸோ அவனும் விடறதா இல்ல. நாங்களும் விடறதா இல்ல" -நிரு

"எப்டியோ உன் அண்ணாக்கு கல்யாணம் நா. நம்ம வீட்டு கல்யாணம் போல இல்ல. அப்போ இன்னும் டூ மந்ஸ்ல கலகலப்பு தான். நம்மள இன்வைட் பண்ணுவ தான?" -நேஹா

"ஹாஹா. நடக்குறது என் அண்ணாவோட கல்யாணமா இருந்தாலும் என் பிரெண்ட்ஸ் தான் அதிகமாக இருப்பாங்க டார்லிங். ஸோ உங்களுக்கு தான் முதல் பத்திரிகையே." -நிரு

"இது நம்ப முடியாத கதையா இருக்கே.
நம்மல இன்வைட் பண்ணுவ அத ஒத்துக்குறோம். ஆனா நமக்கு தான் முதல் பத்திரிக்கைன்னு சொல்றியே, இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா பேபி?' -வித்யா

"ஹீ ஹீ.
அது என்னன்னா டார்லிங். நீங்க எல்லாரும் எனக்கு எவ்ளோ முக்கியம்னு சொல்ல தான் அப்டி சொன்னன்.
நீ இவ்ளோ பீல் பண்றதா இருந்தா உனக்கே முதல் பத்திரிகை வெச்சிடுறேன்.
யூ டோன்ட் வொரி." -நிரு

"எப்டியோ நமக்கு பத்திரிகை வந்து சேர்ந்ததுன்னா ஓகே.
உன் வீட்டுக்கு பெட்டிய தூக்கிட்டு வந்துருவோம்." -அஞ்சலி

"சூப்பர் சூப்பர்.
அப்போ கலக்குறோம்."
என்று நிரு கையை நீட்ட ஏனைய நால்வரும் அவளோடு கை சேர்த்துக்கொண்டனர்.

இரவு சமையலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிகிழினியை வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்தாள் நிஷ்மிதா.

"ஏன் குட்டி நீ உன் வாய மூடவே மாட்டியா?
எப்போ பாரு வளவளன்னுட்டே இருக்க" - நிகிழினி

"எனக்குன்னு ஒரு பாய் பிரென்ட் இருந்தா உன் கூட எதுக்குமா இப்டி பேசிட்டு இருக்கணும்.
எனக்குன்னு யாரும்மே சிக்க மாட்டேங்குறாங்க பாறேன்.
ஸோ சேட்." -நிஷ்மிதா

"அடியேய் நா உன் அம்மாடி.
அம்மா கிட்ட பேசுற பேச்ச பாரு"
என்று கையில் இருந்த தோசைக் கரண்டியாலே இரண்டு அடி போட்டார் அம்மா.

"சும்மா போமா.
நிகில் அத்தானாவது இந்த சனாவை கல்யாணம் பண்றேன்னு அப்போ சொல்லாம இருந்திருந்தா அவர் கூடயாவது கடல போட்டிருக்கலாம்.
உண்மையிலே நம்ம சனா ரொம்ப மொக்க மா. நிகில் அத்தான போய் யாராவது கோபத்துல சரி வேணாம்னு சொல்லுவாங்களா. எனக்கு மட்டும் அப்டி ஒரு ஆள் சிக்கினாருன்னு வைங்க என் கண்ணுக்குள்ளையே வெச்சு பார்த்துக்குவேன் தெரியுமா... சன..."
நிஷ்மிதா பேசிக்கொண்டிருக்கும் போதே

"உன் லெப்ட் கண்ணுலயா இல்ல ரைட் கண்ணுலயா குட்டி?"
என்று கேட்டபடியே வந்து குளிர் சாதனப் பெட்டியை திறந்தான் நவா.

"நவாண்ணா!"
என்று விக்கித்து நின்றாள் வாயாடி.

"ஆமா நானே தான் குட்டி.
எந்த கண்ணுல வெச்சிக்குவ"
என்று கேட்டு அவளின் காதை திருகினான் நவா.

"ஐயோ... அதுவந்து ணா..."

"என்ன வந்து... போயி..."
அவனது கை நிஷ்மிதாவின் காதில்தான் இருந்தது.

"அண்ணா ப்ளீஸ் ணா விட்டுரு. வலிக்குது."
போலியாக சிணுங்கினாள் குட்டி.

"நா கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே குட்டி.
பெர்ஸ்ட் ஆண்ஸ்வீர் த கோஷ்யன்." -நவா

"சரியான விடாக்கண்ணனா இருக்கானே இந்த அண்ணா"
என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டவள்,

"ஹீ ஹீ. அது வந்துணா எனக்கு இன்னும் ஆள் செட் ஆகளனால நா இன்னும் எந்த கண்ணுல வெச்சு பார்த்துக்கலாம்னு டிசைட் பண்ணலேயே"
என்று உதட்டை பிதுக்கினாள் நிஷ்மிதா.

அவளது உதட்டை பிடித்து இழுத்து வைத்தவன்,
"உனக்கு இது மட்டும் இல்லாம இருந்தா டாக் உன்ன தூக்கிட்டு போயிருக்கும்.
எப்டியோ தப்பிச்சிட்ட."- நவா

"சரியா சொன்னடா கண்ணா"
என்று நவாவுடன் ஹைபை போட்டுக்கொண்டார் நிகிழினி.

"தோச கருகுது அங்க பாருமா.
என்ன கலாய்க்குறதுக்கே கூட்டு சேந்துக்குறாங்க."
என்று தன் தாயை முறைத்தாள் நிஷ்மிதா.

"இன்னேக்கி முறு முறு தோசை தான் செய்றேன் குட்டி"
என்று கூறி நவாவைப் பார்த்து கண்ணடித்து வைத்தார் இவர்களின் அம்மா.

"இந்த அம்மா ரொம்ப மோசமில்ல குட்டி. உன்ன ரொம்ப ஓட்டுறாங்க.
வா நாம அப்டி உட்கார்ந்து அம்மாவ ஓட்டலாம்."
என்று சமையல் அறையோடு சேர்ந்தாற்போல் போடப்பட்டிருக்கும் மேசைக்கு அவளை கூட்டிக்கொண்டு போனான் நவா.

"அப்டி வாணா வழிக்கு"
அம்மாவைப் பார்த்து நாக்கை துருத்தியவள் நவாவோடு சேர்ந்து சென்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro