51.மீராஜோ

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

51. மீராஜோ

பதட்டமாக வெளியேறிய கதிரை அவனறியாமல் பின்தொடர்ந்தனர் அபினவும் அகரனும்.

மற்றொரு ஃபோனில் பேசிக்கொண்டிருந்த அஸ்வினிடம், "பிரியங்கா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது அஸ்வின். நீங்கள்  சந்தேகப்பட்டதைப் போல நெடுமாறன்தான் பிரியங்காவை, கடத்தி வைத்திருக்கிறான். நாம் அப்புறம் பேசலாம்." என்று கூறி போனை கட் செய்துவிட்டு, கதிர் தனது பைக்கில் பறந்தான்.

நெடுமாறன் கூறிய குடோனுக்கு முன் பைக்கை போட்டுவிட்டு வேகமாக உள்ளே நோக்கி ஓடினான் கதிர். 

கதிரின் பைக் சென்ற வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் பின்தங்கினர் அபினவ்வும், அகரனும்.

அதேவேளையில் டாக்டர் அஸ்வின், அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கதிர் ஃபோனைக் கட் செய்யவும், மொபைல் ஃபோனைப் பார்த்தவர், மீண்டும் கதிருக்கு ஃபோன் செய்து நெடுமாறன் பிரியங்காவை எங்கே கடத்தி வைத்துள்ளான்?' கேட்கலாம் என்று நினைத்து, கதிருக்கு ஃபோன் செய்ய, கதிரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

குடோனுக்கு உள்ளே வந்த கதிர், குடோன் காலியாக இருப்பதைப் பார்த்து, "பிரியங்கா…. நெடுமாறன்…" என்று சத்தமாக அழைத்தான். 

சிறிது நேரத்தில் தடியர்கள்  சூழ வந்த நெடுமாறன், "வா கதிர்! கல்யாண மாப்பிள்ளை இங்க வருவேன்னு நிஜமாவே நான் எதிர்பார்க்கவே இல்லை… நீ வராம இருந்துடுவியோன்னு சின்ன சந்தேகம் மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு…" என்று கூறியவாறே கதிரை ஏளனமாகப் பார்த்தபடி,

"அவ்வளவு பாசம் பிரியங்கா மேல… ம்ம்?... இந்த பாசத்தை என் தங்கச்சி மேல வச்சிருந்தேன்னா,நீ இன்னொரு கல்யாணம் பண்றதுக்கு தயாராகியிருப்பியாடா?" என்று கத்தியவாறு, நெடுமாறன் ஓங்கி ஒரு அரை, கதிரின் கன்னதில் விட, 

கதிருக்கு கோபம் வந்தாலும் பிரியங்காவின் நிலையை நினைத்து தனது கோபத்தை கட்டுப்படுத்தியனாய், "பிரியங்கா எங்கே?" என்று அடிக்குரலில் கேட்டான்.

மீண்டும் ஒரு அரை அரைந்த நெடுமாறனிடம், "அண்ணே! இவன்ட்ட எதுக்குப் பேசிகிட்டு இருக்கீங்க? முதலில் இவனைக் கட்டி போட்டுவிடுவோம்." என்றபடி நெடுமாறனின் பின்னால் நின்ற இரு தடியர்கள் கதிரின் அருகே வர,

கதிர், அதுவரை அடக்கி வைத்திருந்த கடுப்பை எல்லாம் ஒன்று சேர்த்து, கை முஷ்டியை மடக்கி தடியர்களின் தாடையைக்  உடைத்தான்.

அதைக் கண்டு மிரண்டு இரண்டடி பின்வாங்கிய நெடுமாறன், "என்னடா வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கிறீங்க? இவன புடிச்சு கட்டுங்கடா!" என்று மீதமுள்ள தடியர்களிடம் கட்டளை இட, அவர்களும் கதிரிடம் உதைவாங்கி ஆளுக்கு ஒரு திசையில் விழுந்ததும்.

வேகமாக அருகில் இருந்த அறைக்குள் சென்ற நெடுமாறன், ஒரு கத்தியை பிரியங்காவின் கழுத்தில் வைத்தபடி அறையிலிருந்து வெளியே வந்தான்.

"கதிர்... ஒழுங்கா உன் பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் உட்கார். இல்ல, இவ கழுத்தை ஒரே சீவா சீவிடுவேன்." என்று கத்தியைப் பிரியங்காவின் கழுத்தில் சற்று அழுத்தவும்,

"வேண்டாம்! அவளை ஒன்னும் பண்ணிடாத... உனக்கும் எனக்கும் தானே பிரச்சனை? இதுக்கு நடுவில் பிரியங்காவ இழுக்காத. அவ குழந்தை டா… அவள விட்டுடு." என்று குரலை இறக்கி கேட்ட கதிரிடம், 

"இந்த விளக்கத்தை கேட்கத்தான் உன்னை நான் வரவச்சேனா? முதல்ல போய் அந்த சேர்ல உட்காரு." என்றான், தான் நினைத்தபடி கதிரின் கல்யாணம் நிற்கப் போகும் மிதப்பில்.

அப்போதைக்கு ப்ரியங்காவின் கழுத்தில் இருக்கும் கத்தியை விளக்க எண்ணிய கதிர், அமைதியாகச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கீழே உருண்டு கொண்டிருந்தவர்களை பார்த்து, "டேய் எவனாவது எழுந்து அவனை கட்டுங்கடா!" என்று நெடுமாறன் கூற,

எவனாலும் எழுந்திருக்க முடியவில்லை.

வேறு வழியில்லாமல் பிரியங்காவை விட்டுவிட்டு வேகமாக கதிரை நோக்கிச் சென்ற நெடுமாறனை, கதிர் புரட்டி எடுத்தான்.

கதிரின் அடியிலிருந்து தப்பித்து, பிரியங்காவைப் பிடிப்பதற்காக நெடுமாறன் ஓட,

கதிர் பிரியங்காவை நோக்கி, 

"பிரியங்கா… இந்த இடத்தை விட்டு ஓடிவிடு!" என்று கத்தினான். 

உடனை பிரியங்காவும் வேகமாக குடோன் வாசலை நோக்கி ஓடினாள்.

அங்கே வாசலை அடைத்துக்கொண்டு யாரோ நின்றிருக்க அவர்கள் மீது மோதி மயங்கி விழுந்தாள் பிரியங்கா.
*******

கல்யாண மஹாலில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருக்க விருந்தினர்கள் குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்தனர்.

கல்யாண அலங்காரம் முடிந்து தேவதையாய் ஜொலித்த தனது மகள் எழிலழகியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார் திவ்யா,

"என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா... எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? இவ்வளவு நாளா நிறைய கஷ்டத்தை அனுபவிச்சுட்ட... இனிமேலாவது நீ நல்லா இருக்கணும்." என்று தன் மகளைக்  கண்ணீர் மல்க வாழ்த்தினார்.

"கதிர் ரெடியாயிட்டாராம்மா?" என்ற எழிலின் குரலில் இருந்த ஒட்டாத தன்மையை உணர்ந்து புருவம் சுழித்த திவ்யா, 

'மீண்டும் கல்யாணத்தில் ஏதேனும் தடங்கல் வந்துவிடுமோ? என்று தன் மகள் பயப்படுகிறாள்.' என்று எண்ணி, தன்னையே சமாதானம் செய்து கொண்டு,

"மாப்பிள்ளையும்  இந்நேரம் ரெடி ஆகி இருப்பார். நீ உன் மனசை போட்டுக் குழப்பிக்காம அமைதியா, சந்தோஷமாக இரு. ம்ம்?" என்ற திவ்யாவிற்கு

பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் எழிலழகி.

"சரிடாம்மா… நான் வந்து அழைத்துச் செல்லும் வரை, இங்கேயே அமர்ந்து இரு." என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார் திவ்யா.

'கதிரை அவர் அறைக்கு சென்று பார்க்க வேண்டுமே' என்று எண்ணியவளாக டென்சனில் தனது நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள் கதிரழகி.
********

நெடுமாறனை பிடித்து கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்து, "நான் என்னடா தப்பு பண்ணேன்? எல்லா தடையையும் மீறி, நான், உன் தங்கச்சிய கைபிடிப்பேன்ற நம்பிக்கை இல்லாம, அவசரப்பட்டு தவறான முடிவெடுத்தது உன் தங்கை…" என்று கூறிக்கொண்டிருந்தபோது, 

வாசலை நோக்கி ஓடிய பிரியங்கா தொப்பென விழும் சப்தத்தில் அதிர்ந்து திரும்பிய கதிர், நெடுமாறனை விட்டுவிட்டு வேகமாக பிரியங்காவை நோக்கி ஓட, அங்கே வாசலை அடைத்தபடி நின்றிருந்தவர்,

"ஹலோ! நீங்க தான் கதிரா? நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் முரளீதரன்." என்று காக்கி உடையில் விரைப்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்,

"நான் தான் சார் கதிர். நீங்க எப்படி இங்க வந்தீங்க?" என்று கதிர் ஆச்சரியமாகக் கேட்டான்.

"டாக்டர் அஸ்வின் ஸ்டேசனுக்கு வந்து விபரங்களைச் சொன்னார். அதே சமயம், இதோ இவர்களும் அஸ்வின் டாக்டர்க்கு கால்பண்ணி வழிசொன்னதால, இங்கே வந்தோம்!" என்று தனக்குப் பின்னால் நின்றிருந்த அகரனையும், அபிஷேக்கையும் காட்டினார்.

வேகமாக அவர்களை நெருங்கி, "பிரியங்காவ ஆஸ்பத்திரியில் விட்டுட்டு நீங்க கல்யாண மகாலுக்குப் போங்க… நான் ஃபார்மாலிட்டிய முடிச்சுட்டு வர்றேன்." என்று கதிர் கூறவும்,

"நீங்களும் இவர்களோடு கிளம்புங்கள் கதிர்… இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் னு டாக்டர் அஸ்வின் சொன்னார். நாங்க இவனுங்களை ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போறோம்… நீங்க நாளைக்கு வந்தா போதும் கிளம்புங்க… எனி ஹவ்… கங்கிராஜுலேசன்ஸ்" என்று சிரித்தபடி வாழ்த்தினார்.

"ஸாரி ஸார்! தப்பா எடுத்துக்காதீங்க… நெடுமாறன் எனக்கு உறவுதான்… அவன் மேல எந்த ஆக்சனும் எடுக்க வேண்டாம்."

"கம்ப்ளைண்ட் பண்ணது டாக்டர் அஸ்வின். அவர் என்ன சொல்றாரோ அது படி செய்றோம்… அதுமட்டுமில்ல இந்த நெடுமாறனால் உங்கள் கல்யாணத்திலும் பிரச்சனைன்னு சொன்னார். சோ இன்னைக்கு ஒருநாளாவது எங்க ஸ்டேசன்ல விருந்தாளியா இருக்கட்டும். நீங்க உங்க கல்யாண வேலையைக் கவனிங்க.." என்றதும், 

'இதெல்லாம் உனக்கு த் தேவையா?'' என்பதுபோல் நெடுமாறனைப் பார்த்து விட்டு, பிரியங்காவைத் தோளில் சுமந்தபடி வெளியே வந்தான் கதிர்.

"நீங்க கல்யாண மகாலுக்கு போங்க மாமா… உங்களைக் காணாம அங்கே எல்லாரும் பயந்துடப் போறாங்க... நாங்க ஆட்டோலதான் வந்தோம்… பிரியங்காவ ஆஸ்பத்திரியில் விட்டுட்டு வர்றோம்." என்ற அபிஷேக்கையும், அகரனையும் பார்த்த கதிர்,

"நன்றி சொல்லக்கூடாது... இருந்தாலும், நீங்க இன்னைக்கு பண்ணியது பெரிய விசயம்… ரொம்ப சந்தோஷம் டா… சீக்கிரம் வந்துடுங்க." என்று கூறிவிட்டு தனது பைக்கை நோக்கிச் சென்றான்.

மண்டபத்தில் மங்கல இசை முழங்க… பின் பக்கமாகவே கல்யாண மண்டபத்தின் உள்ளே நுழைந்து, தனது அறைக்கு சென்று தாழிட்டுத் திரும்பியவனுக்குத் திக் கென்று தூக்கிப்போட்டது…

அவனுக்கான கட்டிலில் எழிலழகி அமர்ந்திருந்தாள்… அவளுடைய நெற்றிப் பொட்டில் இருந்த வியர்வையும், உதடு துடிப்பும் அவளுடைய டென்சனை அறிவிக்க, 

சட்டென்று ஜாலியான மூடுக்கு மாறிய கதிர், "இந்த நேரத்து முகூர்த்தம், நம்ம கல்யாணத்துக்க்காகத் தான்டி குறிச்சிருக்காங்க... சாந்திமுகூர்த்தத்துக்கு இல்ல…  பளிங்குச்சிலையாட்டம் பளபளன்னு அலங்காரம் பண்ணிக்கிட்டு என் கட்டில்ல, செல்ல டாபி  என்ன பண்றீங்க?" என்று சிரிக்க, 

"உங்களுக்காகத்தான் காத்திருக்கேன்… என்ன ஆச்சு? நம்ம கல்யாணம் நடந்துடும்ல? ஒன்னும் பிரச்சனை இல்லைல?" என்று பதட்டமாக கேட்டாள் எழிலழகி.

அவள் குரலில் இருந்த பதற்றம் உடல்மொழியில் இல்லாததைக் கவனித்தாலும், "ம்ம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு…" என்று நடந்தவிபரங்களைக் கூறிவிட்டு, 

"சரி நீ உன் அறைக்குப் போ… எல்லாம் சக்சஸ் ஆயிடுச்சு… இனி சந்தோசம் மட்டும்தான் உன் முகத்துல தெரியனும்… ம்ம்ம்?" என்று கூறியபடியே குளியலறைக்குள் புகுந்தான்.

கட்டிலில் அமர்ந்திருந்த எழிலோ சற்றும் அசையாமல் அப்படியே அமர்ந்தபடி, "இல்ல கதிர்… பிரச்சனை முடியல… இனிதான் ஆரம்பமாகப் போகுது." என்று அடிக்குரலில் கூறினாள்.

கல்யாணப்பந்தலில் புரோகிதர் கூறிய மந்திரங்களை தப்பும் தவறுமாக கூறிக்கொண்டிருந்த கதிர், அருகிலிருந்த புரோகிதரிடம்,

"ஏங்க… உங்களுக்கே இது நியாயமா படுதா… பல வருசம் கஷ்டப்பட்டு நீங்க கத்துக்கிட்ட மந்திரங்கள, தமிழையே முழுசா பேசாத என்னை மாதிரி ஆளுகிட்ட, நீங்க சொல்லச்சொல்ல மந்திரத்தை திருப்பி சொல்லுனும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப ஓவராத் தெரியல?... இப்படி கன்னா பின்னானு மந்திரத்தை நான் கொலை பண்ணா இந்த அக்னிபகவானுக்கு கோபம் வந்துடாதோ?" என்று நீட்டி முழங்கியவனைப் பார்த்த புரோகிதர்,

"இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கா? எல்லா கல்யாணத்துலயும் நடக்கிற கூத்துதான் இது… உங்களால முடிஞ்சவர ஃபாலோ பண்ணுங்க… நான் சமாளிச்சுடுறேன்." என்று சிரித்தார்.

"உறுதிமொழின்ற பேர்ல நீங்க ஒன்னு சொல்ல, நான் அதுக்கு எதிரா சொல்லிட்டா தப்பில்லையோ?" என்று புரோகிதரிடம் வாயாடிக் கொண்டிருந்த கதிரின் காதைத் திருகி நேராக அமர வைத்த சியாமளா, 

"புரோகிதருக்குப் பாடம் எடுக்கிறத விட்டுட்டு நேர உட்காரு… இதோ எழிலழகியை அழைச்சுட்டு வர்றாங்க பாரு!" என்றதும், 

ஆர்வமாக எழிலழகியைப் பார்த்தவனுக்கு வைத்தகண்ணை எடுக்க முடியவில்லை…

'இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்கன்னு எங்கேயோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். அத இன்னைக்குத்தான் நேர்ல பார்க்கிறேன்.' என்று வியந்து பார்த்துக்கொண்டிவனின் தோளில் யாரோ நறுக்கென்று கிள்ள, நிமிர்ந்து பார்த்த கதிரிடம்,

"ஏன் இப்படி முழுங்குற மாதிரி பார்த்துவைக்கிற? மானத்த வாங்காம, இங்க, யார் பெத்த பிள்ளையோ, நீ திருப்பி சொல்லலைனாலும் கண்டுக்காம தனியா மந்திரம் ஓதிக்கிட்டிருக்கிற இந்த அப்பாவி ஜீவன் சொல்றபடி செய்." என்று சியாமளா, புரோகிதரைக் கண்களால் காட்டி, ஹஸ்கி வாய்சில் உறுமினாள்.

எழிலழகி தனதருகில் அமர, "யப்பா… இந்தத் தருணத்துக்காக எத்தன காலம்டா காத்திருந்தேன்." என்று மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து கதிர் சப்தமாக பேச,

"மாப்பிள்ளை, கொஞ்சம் கூட சம்மந்தமில்லாம மந்திரத்தை உச்சரிக்கிற மாதிரி இருக்கே?" என்ற புரோகிதரை,

"நான் எப்ப சரியான முறைல உச்சரிச்சேன்?" என்றதும்.

"வெரிகுட் இப்ப கரெக்டா சொல்றேள்!" என்றதும் இவருக்கு காது கேட்குதா இல்லையா? என்று சந்தேகத்திற்கு உள்ளானான் கதிர்.

சிறிது நேரத்தில் "கெட்டி மேளம் கெட்டி மேளம்!" என்று புரோகிதர் கூற, மங்கல வாத்தியங்கள் இன்னும் சப்தமாக முழங்க, 

'அட்சதையை எப்போதடா இவங்க தலையில் போட்டுட்டு உட்காரலாம்!' என்று மணமக்களை உறவினர் முறைக்க, 

"மாப்பிள்ளை இந்தத் திருமாங்கல்யத்தை எடுத்து பொண்ணுக்குக் கட்டுங்கோ!" என்றதும்,

உடல்சிலிர்க்க, திருமாங்கல்யத்தை இரு கரங்களில் ஏந்தியவன், தனதருகில் தந்தப்பதுமையாய் அமர்ந்திருந்த எழிலழகியின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்.

மனமெல்லாம் பூரிக்க எழிலழகியைப் பார்த்தவனுக்கு ஆச்சரியமானது… 'அறுந்தவாலு இவ்வளவு அமைதியா இருக்காளே? எப்படி?' என்று நினைத்தவன்,

"ஹோய்! என்னாச்சு தீடீர்னு ரொம்ப சமத்தா உட்கார்ந்திருக்க?" என்ற கதிரைத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள் கோவைப்பழமாய் சிவந்திருக்க,

"ராத்திரி பூரா தூங்காம கண்ணொல்லாம் சிவந்திருக்கு பாரு… இன்னும் ஏன் முகத்தை உர்ன்னு வச்சிருக்க? நமக்குத்தான் கல்யாணம் முடிஞ்சுடுச்சில்ல? கொஞ்சம் சிரியேன்." என்ற கதிரிடம்,

"என்னைத்தவிர வேற ஒருத்தர உன்னால கல்யாணம் பண்ண முடியுமா?" என்று எழிலழகி கேட்க, 

'இவ என்ன எழிலினியாள் போல பேசுறா?' என்று அந்தக் குரலின் தாக்கத்தில் நிமிர்ந்து பார்த்த, கதிரின் அருகில் இருந்த எழிலழகியின் உருவம் மறைந்து எழிலினியாள் தெரிகிறாள்…

********

பெயர் :மீராஜோ

Watpad id: vijayish

பிரதிபலி ஐ.டி: meerajo

*********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro