4- மகா ராஜ்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

4. அத்தியாயம்

இளம் தென்றல் இனிதாய் வீச
இரவின் கருமையில் ஒளிரும் விண்மீன்கள் வசந்த காற்றையும்
வருடிச்செல்லும் வாடைக்காற்றையும்
வீசியபடியே மரங்களும் செடிகளும்
நடனமாட உச்சி மலைமுகட்டில் ஊரையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது அந்த உருவம்.

மனிதனா மிருகமா என்றறிய முடியா உருவமது. உதடுகள் இரண்டும் ஏதோதோ சபித்து கொண்டிருக்க உணர்வற்று இருந்தது அந்த உருவம்.
பலத்த காற்று நில்லாமல் வீச
மரங்கள் யாவும் சோர்வில்லாமல் அங்குமிங்குமாய் அலைய எதுவுமறியவில்லை கல்லறையை
அரியணையாய் கொண்டு அதன்மேல் வீற்றிருந்த அந்த உருவம்.

மலையுச்சியில் இடம் கொண்டிருந்த பாழடைந்த கட்டிடமதிலே பல இடிபாடுகள் கொண்ட கல்லறை.
சுற்றிலும் எங்கும் பச்சை பசேலென்று பசுமை நிறைந்திருக்க அந்த கட்டிடம் மட்டும் கருமை கொண்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னே கருகி இருந்திருக்கும் போலும். அந்த கட்டிடத்தின் தரையில் தான் கல்லறை. அதுவும் மூலைமுடுக்கெல்லாம் இடிந்திருந்தது.

ஒலியெழுப்பும் பூச்சிகளும் ஊர்ந்து செல்லும் அட்டைகளும் அருவருப்பு உண்டாக்கும் வேறுசில பூச்சிகளும் உலா வர எதுவும், முணுமுணுத்து கொண்டிருந்த அந்த உருவத்தை கருத்தில் கொள்ளவில்லை. இதுவரை கேட்கா குரலில் சபித்துகொண்டிருந்த அந்த உருவம், முணுமுணுப்பையும் தாண்டி சற்று உயர்ந்த குரலில் ஏதேதோ கூற தொடங்கியது.

முற்றும்துறந்த உனை
மூன்று ஜென்மங்களாய்
சிறை கொண்டிருக்க
முன்னூறு வருடங்கள் தாண்டி
உருவெடுத்து வருகிறேன்..
வேரோடு உறைந்து
அழியாது நிற்கும்
என் பகை தீர்க்க
வெட்டிவீழ்த்திய பின்னும்
விதி வென்று வருகிறேன்.
இம்முறை வீழ்ச்சி எனக்கல்ல..
உன்னவர்களை கொண்டே
உன்னை அழிக்கிறேன்.
முதலில் உன் சிறையை பற்றியிருக்கும் கொடிகளை அவிழ்க்கிறேன் பார்..
உன் இரத்தம் கொண்டே
உனை இறக்கசெய்கிறேன் பார்..
என்று சூளுரைத்து கொண்டது அந்த கோரமான உருவம். அகோரம் எனும் வார்த்தையே அதற்கு குறைவு தான்...

கருவளையம் சூழ்ந்த கண்பகுதி... கண் இருக்கிறதா இல்லையா என்று கூற அறிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் உள்ளிருந்து தெரிந்த இள இரத்த நிறம் கண் இருக்கிறதென்று உறுதிபடுத்தியது.
வெட்டப்படாத முடியும் சடைபிடித்திருக்க கட்டுகடங்காத நிலையில் நீண்டிருந்தது. முணுமுணுக்கையில் வெளிப்பட்ட பற்கள். பற்களா என்று சந்தேகம் கொள்ளலாம். வெண்மை நிறம் தான் இல்லை. முழு மஞ்சள் நிறம் கொண்டிருக்க பற்களின் இடையில் இரத்தகறைகள். அதுவும் சிலது சிவப்பு நிறம். வேறு சிலது காய்ந்திருந்த கறுப்பு நிறமாயிருந்தது. உயிர்மூச்சு நிற்காதிருக்க இரத்தம் குடித்தே உயிர்வாழ்ந்திருக்கும் போலும்...
ஒட்டிபோயிருந்த கன்னம் அதிலும் பல கீறல்கள்.. அங்கும் காய்ந்திருந்தது இரத்தத்தின் தடம். உடம்பு மொத்தமும் ஒட்டியிருக்க எலும்புகள் அப்பட்டமாக காட்சியளித்தது. தடமாயிருந்த உடம்பில் ஒட்டு துணியில்லை. தோல்மூடிய உடம்பே அது. நிர்வாணகோலம் பூண்டிருந்தது.
இடுப்பின் கீழிருந்த பாகம் அதனை பெண்ணென உணர்த்த கால்களோ தடித்திருந்தது. கை கால் நகங்கள் நீண்டிருக்க அதிலும் இரத்த கறைகள் கருத்திருந்தது.. முணுமுணுத்து கொண்டிருந்த அகோர உருவத்தை தொல்லை செய்தது தீடீரென வந்த அந்த இரத்தத்தின் வாடை... ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே எழுந்த உருவம் நீண்டு சடையாகியிருந்த முடியை இழுத்து கொண்டே கத்தியது. ஏதோ வாய்க்குள் நுழையா வார்த்தைகளும் அறியா மொழிகளும் உதிர்த்தது. கல்லறையின் மேலே நின்றிருக்க கட்டிடத்தின் வெளியே ஓடியது ஏதோ ஒரு விலங்கு. இரத்தசிவப்பு கொண்ட கண்களில் பளபளப்பு. அழுந்த கால்களை ஊன்றியவாறே நடந்த உருவம் கட்டிட வாசலில் நின்று ஏதோ ஜெபிக்க ஆடிக்கொண்டிருந்த மரத்தில் ஆவலுடன் ஏற முற்பட்ட மலைமுயல் ஒன்று தடுமாறி விழுந்தது. விழுந்த இடம் பிசுபிசுப்பாயிருக்க நகரமுடியாமல் தவித்தது. வெள்ளைமுடி கொண்டிருக்கும் முயலின் மேல் இப்போது வெண்மை என்ற நிறத்திற்கு அடையாளமே இல்லை.
விழுந்த முயலை நோக்கி வந்த அகோர உருவம் ஒற்றை கையில் அதனை தூக்கி தன் நகம் கொண்டு அதன் தோல் கிழித்து அதன் இரத்தத்தை புசிக்க தொடங்கியது.

இருகைகளிலும் நிறைந்த இரத்தம் கொண்டு உடம்பிலும் அடித்து கொண்டது.. கிழிந்து நார்நாராகியிருந்த முயலை எடுத்து கட்டிடத்தின் சுவரில் அடித்து கொண்டே தன் கோபத்தை காட்டிக்கொண்டிருக்க,

மகேஷூம் அனு அமிர்தா இருந்த கோவிலின் வெளியே நின்ற கோர உருவத்திற்கும் இரத்தம் வேண்டுமென்ற பேராசை வந்தது. கண்கள் கவனம் தவறினால் தன் பழிவெறி தன்னையே கொன்றுவிடும் என நினைத்த கோர உருவத்தின் கண்முன்னே அமிர்தா விழ அமிர்தாவின் இரத்தம் புசிக்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. மகேஷை கொண்டே அவ்வாசை நிறைவேற்ற துடித்தது.

இங்கு தன் முன்னோருக்கு திதி கொடுத்து முடியும் நேரம் அங்கே ஓர் இடத்தில் வாடிபோன செடிகளும் சலசலக்கும் சருகுகளுக்குமிடையே ஓர் இடைவெளி தென்பட்டது. அந்த இடைவெளி பாறைகளுக்கு இடையேயான இடைவெளியாக இருக்க கண்ணால் காண முடியாத அந்த வழியினுள்ளே.....
துருபிடித்த ஓர் இரும்பு பெட்டி.. சுற்றிலும் பல தாயத்துகளும் மந்திர நூல்களுமாய் அடுக்கடுக்காய் கட்டப்பட்டிருந்தது அந்த பெட்டியில்..
புதைக்கப்பட்டிருந்த அந்த பெட்டியை சுற்றியிருந்த நூல்கட்டுகளில் முதல்கட்டுநூலும் ஒரு சூலமும் சிதறியது.
பெட்டியும் ஒரு‌முறை ஆட்டம் கண்டு அடங்கியது.

அங்கே மலை உச்சியில் இருந்த கோர உருவம் நிலமே அதிரும் வகையில் கத்தி தன் முதல் வெற்றியை கொண்டாட மரத்திலிருந்த கோர உருவமும் தன் மகிழ்ச்சியை கொக்கலித்து சிரித்து காட்டியது...

இங்கு நடக்கும் கோர உருவங்களின் மர்மம் ஏதுமறியாது அவர்கள் சிக்கிய வலையில் மாட்டியிருப்பதையும் உணராது குளக்கரையில் தன் பாட்டிக்கு திதி கொடுத்து விட்டு அனு, அமிர்தா, மகேஷின் தாய் அமர்ந்திருக்க அனு, அமிர்தா இருவரும் கருவறையில் கற்பூர ஒளியில் ஜொலித்து கொண்டிருந்த தாயவளையே நோக்கியிருந்தது. இருவரின் எண்ணமும் அலைகழிக்கும் எண்ணங்களில் இருந்து விடுதலை தாவென்றது. இவர்களின் எண்ணமோ இப்படி இருக்க கருவறையினுள் குடி கொண்டிருந்த தாயவளின் எண்ணமோ வேறு மாதிரி இருந்தது போலும்.. எதுவுமறிய இயலா புன்னகை ஒன்றையே உதிர்த்துகொண்டாள் அந்த தாய்‌.

குற்ற உணர்வில் குறுகி கொண்டிருந்த மகேஷ் குளக்கரையிலே அமர்ந்துவிட
அவன் யோசனையில் மொத்தமும் நிறைந்திருந்தது இந்த இரண்டு பெண்களும் புதிதாய் வரபோகும் நபரும்.. எனக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு.. அவர்களுக்கு விரிக்கபட்ட வலையில் நான் முதலில் மாட்டியது ஏன்? எனும் சிந்தனைகள் சிதற எதற்கும் பதில் கிடைக்காததால் சோர்ந்து போயிருந்தான். குளக்கரையில் கீழ்படியில் இவன் அமர்ந்திருக்க முதல்படியில் ஒரு சித்தர் சிந்தனையில் சுழன்ற அவனையே பார்த்து கொண்டிருந்தார்.

அவனும் திரும்பி இருந்தபடியால் பின்னால் நின்று கொண்டிருந்தவரை காணவில்லை.
உள்மனது ஏதோ உணர்த்த திரும்பி பார்த்தவன் கண்முன்னே யாருமில்லை.. யாரோ நம்மை பார்ப்பது போல் இருக்கிறதே என நினைத்தவன் பிரம்மையாக இருக்குமென நினைத்து விட்டான்..

மீண்டும் மனது உணர்த்த திரும்பியவன் பார்வையில் விழுந்தது ஏதோ யோசனையோடு தன்னையே உற்றுநோக்கும் அமிர்தா தான்.

"இந்த லூசு எதற்கு தன்னை பார்க்கிறது" என நினைத்தவன்
அவள் எதேச்சையாக பார்ப்பது எனக்கு என்னையே பார்ப்பது போல் தோன்றுகிறது என தன்னை சமாதானபடுத்தி கொண்டு
மீண்டும் நீரில் மிதந்து கொண்டிருந்த பொரிகளை கவ்வி எடுக்கும் மீன்களை வேடிக்கை பார்க்க துவங்க மீண்டு அதே சித்தர் சாதாரண மனித வடிவில் இன்னும் இரண்டு படிகள் கீழிறங்கியிருந்தார். சிறிது நேரம் மகேஷை பார்த்தவர் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்க அரவம் கேட்டு திரும்பியவன் கண்முன்னால் நின்றார் அவர்.

வெள்ளை வேட்டி சட்டை அணிந்து நெற்றியில் விபூதியும் கையில் ஒரு துண்டுமாக நின்றிருந்தார். முகமே தெய்வீகமாக இருக்க உள்ளுணர்வு உந்த அவரை கண்டதும் எழுந்து நின்றுவிட்டான். அவரும் என்ன நினைத்தாரோ மகேஷை பார்த்து புன்னகை ஒன்றை உதிர்த்து குளத்தில் கைகால்களை நனைத்து வந்தார். அவர் வரும்வரையிலும் அவரையே பார்த்து கொண்டிருந்தவன் அருகே வந்தவர் உன் மனசஞ்சலங்கள் அனைத்தையும் தாயிடம் கொட்டிவிடு.. தாய் விடை தருவாள் என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றார். எந்த தாய் என்று கூறாததால் கோவிலில் இருந்த கருவறை தாய்க்கு சிறப்புபூஜை ஒன்றை வைத்து அவரிடம் தன் மனம் திறந்து பேசினான்.

தாயே... நான் ஏதோவொரு இக்கட்டில மாட்டியிருக்கேன்.. புரியுது.. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று என்னை நல்லா அலைகழிக்குது.. இதில நான் மட்டுமில்ல என்னை மாதிரி எதுவுமறியா மூன்றுபேர் மாட்டியிருக்காங்க. எங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்து வழிநடத்து என்றவன் அங்கிருந்த திருநீறு எடுத்து வைத்து விட்டு தன் தாயின் அருகே அமர்ந்தான்.
அவன் பார்வை தாயின் அருகே இருந்த இளம் காரிகைகள் இருவரையும் தீண்டி செல்ல இருவரையும் ஆராய துவங்கினான்.

அனு, அமிர்தா இருவருக்குமே புன்னகை உதிர்த்தாலே போதும் பொலிவு பெறும் முகம். பால் வெள்ளையே, பளிங்கு வெண்மையோ கிடையாது.. கோதுமை நிறம் தான்.. ஆனாலும் முக லட்சணம் அவர்கள் அழகினை மெருகூட்டியது. அழகு இருவருக்கும் ஒத்துபோக குணங்களில் சில வித்தியாசங்கள். அனு அமைதி , பயந்த சுபாவம் என்றால் அமிர்தா அமைதி என்றால் என்ன என கேட்பவள் போலும்.. அவளிடம் பேசிய சில வார்த்தைகளில் முடிவு செய்து விட்டான். அமைதி அடக்கம் கொண்ட அனுவை காட்டிலும் அமிர்தா அவன் மனதில் ஒரு படி உயர்ந்தே இருந்தாள்.
வார்த்தைகளை எண்ணி உதிர்க்கும் அனுவை காட்டிலும் படபடபேச்சில் நொடியில் வெல்லும் அமிர்தா ஆணியாய் பதிந்திருந்தாள் அவன் மனதில்.. எங்கனம் என்றால்..
இதுபோல் ஒரு பெண் வந்தால் வீட்டில் கொஞ்சம் மகிழ்ச்சியும் மௌனமாளிகை அவன் வீட்டில் சலசலக்கும் சலங்கைகாரிராக இருப்பாள் என நினைத்தான்.

தன் எண்ணம் போகும் போக்கை நினைத்தவன் இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா என்று தன் மனதை அடக்கி கொண்டான். இதுவரை அடங்கியிருந்த குற்றவுணர்ச்சி மீண்டும் தலைதூக்கியது. அவனும் என்ன செய்வான் கத்திமுனையில் நிற்பது அவனின் தாயல்லோ!!

இது எதையும் அறியாது தன்னை சுற்றி நடப்பவை அனைத்தும் கடவுளின் சித்தமே என்று அவனின் மேல் பாரத்தை போட்டு தங்கள் வாழ்க்கையினை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரும் தங்கள் தினசரி வாழ்க்கை குறித்து கூறிவிட்டு தன் பாட்டி கூறிய கதையின் எதிர்பலன் தன் கனவில் வந்ததனை அமிர்தா கூற வரும் நேரம்
அவர்கள் அமர்ந்திருந்ததற்கு எதிர்புறம் நின்றிருந்த மரத்தின் அடியில் இருந்து லேசாக ஒரு கரம் எழுந்தது. பேசிக்கொண்டிருந்தது மறந்து இருவரும் அம்மரத்தின் அடியில் செல்ல மகேஷூம் அவன் தாயும் அவ்விடத்திலே அமர்ந்திருந்தனர்.

தோழிகள் இருவரும் அருகே சென்று பார்க்க வயதான மூதாட்டி ஒருவர் படுத்து இருந்தார். ஒருகளித்து படுத்திருந்ததால் அவரது முகம் இருவருக்கும் தெரியவில்லை. அவர் கையசைத்து தண்ணீர் கேட்க அமிர்தா தன் தோள்பையிலிருந்து தண்ணீர் எடுத்து அவருக்கு புகட்ட அனு அவரை தோளோடு அணைத்து தூக்கி பிடித்திருந்தாள்.

தண்ணீர் பாட்டில் அந்த மூதாட்டியின் வாயருகே செல்ல அமிர்தாவிற்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்தியது. என்னதென்று யோசிக்கவும் அவள் துணியவில்லை. தண்ணீர் புகட்டிகொண்டே அந்த மூதாட்டியின் முகத்தை உற்று நோக்க அமிர்தாவிற்கு சொற்கள் வரவில்லை.. நாக்கும் ஒட்டிக்கொள்ள உதடுகளும் பின்னியிருந்தன.. பிரித்து ஒரு வார்த்தை சொல்ல இயலவில்லை.. முயன்ற பொழுது நடவாதது தானாகவே நடந்தது. அவள் வாய் சொன்னதெல்லாம் ஒன்று தான் அன்னம்மாள்... இவள் ஏன் தண்ணீர் கொடுக்காமல் உறைந்து போயிருக்கிறாள் என பார்க்கையில் அவள் உதிர்த்த சொல் இவளுக்கும் கேட்டுவிட இவளும் உறைந்து போனாள்.

அமிர்தாவிற்கு தான் கண்ட கனவு நினைவிற்கு வர அனுவிற்கோ மகேஷின் தான் சொன்ன கதையின் அன்னம்மா நினைவிற்கு வந்தார்.
ஆனாலும் அவள் வேறு யாரையாவது சொல்கிறாள் என நினைத்தவள் அமிர்தாவை வற்புறுத்தி அவருக்கு தண்ணீர் புகட்ட செய்தாள்.

அமிர்தாவும் கனவில் தாக்கத்தில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்று தன்னைதானே சமன்படுத்தி கொண்டாள். அவரை அதிலேயே படுக்க வைத்தவர்கள் அவர்கள் இருந்த இடம் நோக்கி நகர மகேஷ் அங்கு வந்து சேர்ந்தான்.

அமிர்தா, " உங்க அம்மா எங்க மகேஷ் ?" என்று கேட்க
அதோ.. அங்கே தான் இருக்காங்க என கை நீட்டியவாறே அவரை காட்ட திரும்பியவன் ஆட்காட்டி விரல் காட்டிய இடத்தில் யாருமில்லை.

அனுவும் அமிர்தாவும் அன்னம்மாவை பார்கக வந்திருக்க இவர்கள் வர தாமதமாகியதால் மகேஷ் இவர்களை தேடி வந்துவிட்டான். இருவரில் ஒருவர் தொலைந்தாலும் ஆபத்து தன் தாய்க்கு தான் என நினைத்து தான் வந்தான்.

ஆனால் இப்போது? கோவில் தான் எங்கேயாவது போயிருப்பார் எனும் நம்பிக்கையில் கோயில் முழுவதும் சுற்றி வந்து தேட அவரை காணவில்லை. பதறியவன் பெண்கள் இருவரையும் "கோவிலினுள்ளே இருங்க.. வெளியே வந்திடாதீங்க.. ப்ளீஸ்" என்று வற்புறுத்தி கேட்க அவர்களும் சரி என்றிட அவனோ கோவில் படி தாண்டி வெளியே வந்துவிட்டான்.

அங்கும் சுற்றி பார்த்திட அவன் தாயை தான் காணவில்லை.. இது கோர உருவத்தின் வேலை என்றுணர்ந்த அவன் காதுகளில் திரும்ப திரும்ப கேட்ட வாக்கியம்..
"உன் அம்மாவை கொல்லணும்னு நினைச்சிருந்தா ஒரு நொடி போதும் எனக்கு" என்ற அந்த கோர உருவத்தின் வார்த்தையே...
பதறி போனவன் கண்களில் கண்ணீருடன் சோர்ந்திருக்க
அங்கே மரத்தின் மேலே இருந்த கோர உருவம் மந்தகாசபுன்னகையை வீசியது..

மனபாரம் இறக்கிவைக்கவே கோவிலுக்கு வந்திருக்க மனம் அம்புதைத்தது போல் வலியும் பன்மடங்கு பாரமுமேற
தளர்ந்த நடையுடன் இருபெண்களையும் காண வந்தான்.

அவர்களுக்காக தான் தனதன்னையை பயன்படுத்தியிருக்குமோ அந்த கோர உருவம் என்று தோன்ற, அம்மாவை காப்பாற்ற அவர்களை பத்திரபடுத்த முயற்சி மேற்கொண்டான். அம்மா ஆட்டோல வீட்டுக்கு போயிட்டாங்க எனும் பொய்கூறி அவர்கள் இருவரையும் அழைத்து தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இங்கே வந்தும் அவர் வராததால் பெண்கள் இருவரும் கேள்வி கேட்டு குடைய அவனோ அவர்களிடம் வெறுப்பாய் கத்திவிட்டு தனதறை சென்றான்... மகேஷ் மட்டும் இருப்பதனால் அனுவை தனியே விடமனமின்றி அமிர்தாவும் அவளுடன் மகேஷின் வீட்டிலே இருந்தாள்.

மாலை ஐந்து மணி...

மகேஷ் என்ன செய்வது ஏது செய்வதென்று அறியா நிலையில் அறையினுள்ளே அங்குமிங்கும் அடி அளந்து கொண்டிருக்க வீடடின் முன்னே சடன்ப்ரேக் போட்டு நின்றது மகிழுந்து ஒன்று. அதிலிருந்து மகேஷின் தாய் இறங்க கூடவே இறங்கினான் விக்ரம்..

வீட்டின் வெளியே வாகனம் நிற்கும் சத்தம் கேட்டு மகேஷ் வெளியே வர அவன்பின் அனுவும் அமிர்தாவும் வந்தனர். தாயையை கண்டதும்
சேய் அவன் அன்னையை அணைத்துகொள்ள விக்ரம் முகம் கண்ட அனுவும் அனுவை கண்டுகொண்ட விக்ரமும் விழியகலா அதிர்ச்சியில் நிலைத்திருந்தனர்..

மலைமேலும் மரத்தின்மேலும்
குடிகொண்டிருக்கும் இரு வேறு கோர உருவங்களின் குறிக்கோள் என்ன?

பழிவெறியை தீர்த்து கொள்வதென்றால் பகை எதற்கு?

பாறைகளின் இடுக்கில் தாயத்து, மந்திரகட்டுகளில் மாட்டிக்கொண்ட பெட்டியின் ரகசியம் என்ன?

கனவிலே வலம்வந்த அன்னம்மா கண்முன்னே எப்படி? இதுவும் காலத்தின் சூழ்ச்சியோ?
கோவிலில் இருந்த மகேஷின் தாய்க்கும் வெளிநாட்டில் இருந்த விக்ரமும் சந்தித்தது எங்கனம்?

அதிர்ச்சியில் கண்கள் விரிய நிற்கும் விக்ரம் அனு இருவருக்கும் முன்னமே பழக்கம் இருந்திருக்குமோ?

கேள்விகளுக்கு விடை அடுத்த பதிவில்.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro